Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Monday, July 06, 2015 19 Ramadhan 1436

Flash News

.............

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<Previous
Saturday, July 04, 2015
ராஜா எதை வேண்டுமானாலும் பேசலாமா? அரசு அதை அப்படியே விடலாமா?


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! ஜனநாயக நாடு என்பதால் பேச்சுரிமை உண்டு. அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? யார் வேண்டுமானாலும் பேசலாமா? பொறுப்புணர்வு வேண்டாமா? மதக் கலாச்சாரம்; இனக் கலாச்சாரம்; இவைகளின் தனித்தன்மைப் பாதுகாக்கப்பட வேண்டாமா? அரசியல் சாசன உரிமை வழங்கப்பட்ட இந்த ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே சவாலா? மாநில அரசும் மத்திய அரசும் ஒன்று சேர்ந்து மவுனம் சாதிப்பது ஏன்? மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான திரு. ஹெச். ராஜா அண்மையில் மயிலாடுதுறை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஒரு முக்கியமான கருத்தை ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளிதழ் சென்ற 26.06.2015 அன்று வெளியிட்டிருக்கிறது. இவரின் இந்த பேச்சு சில தனியார் தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டிருக்கிறது. ‘‘கல்லூரிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை மாநில அரசு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று மாநில அரசைக் கேட்டிருக்கிறார். கேட்டிருப்பவர் ஏதோ ஒரு சிறிய, சாதாரண அரசியல் கட்சியைச் சார்ந்தவர் அல்ல. மத்தியில் ஆளும் கட்சியாகவுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்கிற பொறுப்பை சுமந்திருக்கிறவர். அவரின் பேச்சு அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாகத்தான் ஊடகங்களில் காட்டப்படுகிறது. இதற்கு மாநில அரசின் கல்வித்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பதில் அளிப்பாரா? பதில் அளிக்க மாநில முதல்வர் உத்தரவிடுவாரா? பி. ராஜாவின் இந்தப் பேச்சு எதைக் காட்டுகிறது? தெரியவில்லையா அரசாங்கத்திற்கு? வேண்டுமென்றே திட்டமிட்டு, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டு, பிடிவாதமாக வம்புக்கு இழுத்து நாட்டில் குழப்பங்களை உருவாக்கிடும் இந்த நச்சுப் போக்கைத் தடுத்து நிறுத்திட மாநில அரசு உடனடியாக முன்வரவேண்டும். பொறுப்பற்ற போக்கில் இதுபோன்ற விஷமக் கருத்துக்களை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளிலும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அடிக்கடி வெளியிட்டு வரும் இவர்மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்? பர்தா அணிவது என்பது பொதுவாகவே பெண்களின் பாதுகாப்புக்கு உரிய ஒழுக்கத்தை நிலைநாட்டுகிற பண்பாடு. ஒரு குறிப்பிட்ட மதக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நேரிய பார்வை கொண்ட முஸ்லிம் அல்லாதோரும் ‘அழகிய பண்பாடு’ என போற்றுகிற நடைமுறை இது. இஸ்லாத்தில் பெண்கள் அன்றாட வாழ்வில் கொண்டிருக்க வேண்டிய அவசியமான பழக்கம். கடமையுணர்வு கொண்ட குடும்ப அங்கத்தினர் தவிர்த்து வெளி ஆடவரின் பார்வையிலிருந்து தவிர்த்துக் கொள்ளவே முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகிறார்களே தவிர இது ஒரு கண்மூடித்தனமான சடங்கு அல்ல என்பதனை ராஜாவைப் போன்றவர்களும் அறியாமல் இல்லை. ஆனாலும் வேண்டுமென்றே நமது கலாச்சார தனித்தன்மையில் தலையிட்டு சமூக வாழ்வியலில் நச்சு விதைகளைத் தூவி விடுகிற இதுபோன்ற கருத்துரைகள் நிறுத்தப்பட்டாக வேண்டும். இது ஏதோ முஸ்லிம் சமூகப் பிரச்சினையாக மட்டும் நாம் பார்க்கவில்லை. எந்த சமூகத்திற்கு எதிராகவும், எந்த மதத்தினருக்குப் புறம்பாகவும் அவர்களின் கலாச்சாரத் தனித்தன்மைக்கு சவாலாகப் பேசுவதோ, கேவலமாக எழுதுவதோ, அதன் மூலம் நாட்டு மக்களுக்கு மத்தியில் அமைதியின்மையை உருவாக்குவதோ, அதைத் தொடர்ந்து நாட்டில் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுவதோ அனுமதிக்கக்கூடிய ஒன்றா? அமைதியை நிலைநாட்டிட கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய காவல்துறை இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னதான் செய்கிறது? என்கிற மக்களின் கேள்விக்கு என்ன பதில்? பாதிப்புகள் வந்த பின்னர்தான் நடவடிக்கையா? பாதிப்புகள் வந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை இல்லையா? ‘‘மாணவிகள் பர்தா அணிந்து கல்விக் கூடங்களுக்கு வருவதில் சட்டரீதியாக எந்த தவறும் இல்லை’ என்று மாநில அரசின் கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாகக் கல்வித்துறை செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். பெண்கள் தங்களை முழுமையாக மூடி உடை அணிந்து வருவதால் யாருக்கு என்ன நஷ்டம்? இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ராஜா போன்றவர்களுக்கு என்ன நஷ்டம்? ஏன் பதைபதைக்கிறார்கள்? எங்கள் பண்பாட்டில், எங்கள் ஒழுக்கத்தில், எங்கள் உரிமையில், எங்கள் கடமையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை? யார் அந்த அனுமதியைத் தந்தது? எங்களை வாழவிடுங்கள். இந்த நாட்டில் அனுமதிக்கப்பட்ட எல்லா உரிமைகளோடும், உணர்வுகளோடும் வாழ்வதற்கு யாரையும்விட எதிலும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள். மண்ணின் மைந்தர்கள்; இந்த மண்ணை நேசிக்கக் கூடியவர்கள்; இந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாட முழு தகுதியையும் கொண்டவர்கள்; வந்தேறிகளல்ல; இந்த மண்ணிலேயே பிறந்த பாரம்பரியத்திற்கு உரியவர்கள், இந்த மண்ணில் விடுதலைக்காக இன்னுயிரை ஈத்தவர்கள்; நாட்டைக் காத்திட எங்களையே அழித்துக் கொண்டவர்கள்; நாடாண்ட பரம்பரையினர்; அனைவரையும் அரவணைத்து வாழவேண்டும் என்று நாளெல்லாம் முழங்கும் சமூகத்தினர்; மதநல்லிணத்திற்குத் தூணாய் விளங்கிய, விளங்கும் தலைவர்களைக் கொண்டவர்கள்; மனிதர்களை மனிதர்களாய்ப் பார்ப்பவர்கள்; ஏற்றத் தாழ்வுகளைக் காலடியில் போட்டு மிதித்தவர்கள்; ஏற்றமிக்கவர்கள் எவராயினும் அவர்களைத் தலையில் தூக்கி மதித்தவர்கள்; மதிப்பவர்கள். யாரிடத்தில் மோதுகிறீர்கள்? எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கலாம்; எண்ணத்தால் என்றென்றும் உயர்ந்து நிற்பவர்கள். எங்களை சீண்டாதீர்கள்; சீண்ட நினைத்தவர்களும் சீண்டியவர்களும் சிதறடிக்கப்பட்டதாகத்தான் வரலாறு. நாங்கள் காட்டுகிற பெருந்தன்மையை பலவீனமாகக் கருதிவிடாதீர்கள்; பெருந்தன்மை என்பது எங்களின் பிறவி குணம். எல்லா சமூக மக்களிடையேயும் பல நல்ல இதயங்கள் இருக்கின்றன. சாதி, மத, சமயப் பார்வைகளுக்கும் அப்பால் மனிதநேய உணர்வுகளைக் கொண்ட மக்கள் ஏராளம்; ஏராளம். இத்தகையோர் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் மதிக்கத் தகுந்தவர்கள். இந்த தனிப்பெரும் தன்மையைக் கொண்ட நாடு நம் பாரத நாடு. இந்த சுதந்திர சுகந்தமே பல நேரங்களில் நமக்கு ஆறுதலைத் தருகிறது. இஸ்லாத்தின் விழுமிய ஒழுக்கங்களைக் கண்டு ஆராதிக்கிற இந்துப் பெருமக்கள் ஏராளம். நாம் இப்போது புனித ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் இறை அச்சத்தோடு நோன்பிருக்கிறோம். இந்த நிலையில் நம்மைச் சந்திக்கிற பிற சமயத்தினர் நாம் செவ்வனே கடைபிடிக்கும் நோன்பை மதித்து, நமக்கு முன்னால் அவர்களும் உண்ணாமல் பருகாமல் அமர்ந்திருப்பதை பார்ப்பதில்லையா? வேண்டுமானால் நம்மிடமிருந்து பவ்யமாக எழுந்து வெளியே சென்று உண்ணுகின்ற, பருகுகின்ற மரியாதையை வெளிப்படுத்துகிற மக்கள் ஏராளம்; ஏராளம். இவர்களைப் போன்றவர்களின் தயாள உணர்வு ராஜாவைப் போன்றவர்களுக்கும் வரவேண்டும் என்பதுதான் நமது அவா. உலக நாடுகளில் மிகப் பெரிய வல்லரசு என பெருமைபடப் பேசும் அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய காட்சி உலகமெங்கும் ஊடகங்களில் வெளியானது. ‘‘முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து வருவதை அரசாங்கத்தின் எந்த துறை அதிகாரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்; மாற்றுக் கருத்துச் சொல்ல எந்த அதிகாரமும் யாருக்கும் இல்லை’’ என்றாரே! உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என பெருமை பேசும் இந்தியா இப்படி அறிவிக்குமா? குறைந்தபட்சம் கல்விக்கூடங்களில் மட்டுமாவது ‘‘இந்த உரிமையில் எவரும் தலையிடக்கூடாது’’ என்று அறிவிக்கப்படுமா? நாட்டில் நல்லவர்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள். நாடு பதில் சொல்லட்டும். பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதில் ஆட்சேபனைகள் எழுப்பப்படுவது அவ்வப்போது ஆங்காங்கு நிகழ்வதும், பிறகு ஆழ்ந்து போவதும், மீண்டும் நிகழ்வதுமான சம்பவங்கள் நமது தமிழ்நாட்டில் பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற தகவல்கள் நமது தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு வருகிறபோது நாம் தலையிட்டு பல நேரங்களில் தீர்வு கண்டிருக்கிறோம். உதாரணமாக, திருவாரூர் மாவட்டம் பொதக்குடி & அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு அந்த ஊர் ஜமாஅத்தினர் முஸ்லிம் லீக் தலைமையைத் தொடர்பு கொண்டு தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டனர். தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களின் அறிவுரைப்படி கல்வித்துறை அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் தொடர்பு கொண்டு தக்க தீர்வினைக் காணும்படி நான்தான் பணிக்கப்பட்டேன். காரியங்கள் முறையாக, சட்டப்படி நிகழ்த்தப்பட்டன. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்; மாவட்டக் கல்வித் துறை அதிகாரி அறிவுறுத்தப்பட்டார்; நிலைமை சீரானது; தீர்வு காணப்பட்டது. அப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகி பள்ளிக்கூடத்திற்கே போவதற்குத் தயங்கிய பெண் பிள்ளைகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்; அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தனர். அந்த ஊர் ஜமாஅத்தினர் இன்னமும் நமக்கு நன்றி பாராட்டியவண்ணம் இருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ். நாம் இதனைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ‘‘முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதில் யாருக்கும், எதற்கும் பங்கமில்லை; நஷ்டமில்லை. மாறாக, ஒழுக்க நிலை மேம்படுகிறது’’ என்கிற பார்வையில் அரசும், அரசு சார்ந்த அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர அதனைக் கீழ்மைப்படுத்திக் கொச்சைப்படுத்த முயற்சிக்கக்கூடாது. இது அரசின் தார்மீகக் கடமை எனக் கருதி கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியும் உரிமையைக் கல்வித்துறை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். பிறைநெஞ்சே! நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; நம்மை எதிராக நினைப்பவர்களும் மனம் மாறி நேரிய பார்வையில் நம்மோடு கைகோர்க்க வேண்டும் என எண்ணுபவர்கள். அந்த எழிலார்ந்த எண்ண ஓட்டத்திலேயே நமது ஆதங்கத்தை இங்கே பதிவு செய்திருக்கிறோம். சமய நல்லிணக்கத்தைப் பறைசாட்டும் நமது குரல் எல்லா சமய கலாச்சார உரிமைகளுக்கும் குரல் கொடுக்கும். இது சன்மார்க்க சத்தியக் குரல். இதுவே நமது தலைவர் கண்ணியமிக்க காயிதே மில்லத் கற்றுக் கொடுத்த குரல்; சந்தனத் தலைவர் சிராஜுல் மில்லத் சங்கநாதமாய் ஓங்கி ஒலித்திட்ட குரல்; இதற்காக முழு மூச்சாய் பாடுபடும் முனீருல் மில்லத் முனைப்புடன் முழங்குகிற குரல். இந்தக் குரல்நெறி ஒன்றுதான் குன்றாத ஒளிவிளக்காய் மிளிரும்; குறையில்லா குவலயத்தை உருவாக்கும். பெருமைமிகு பாரதத்தை பாருயரச் செய்யும். அதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றிடல் வேண்டும்; நாமும் முனைந்து துணை நின்றிடல் வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் எம்.அப்துல் ரஹ்மான், ஆசிரியர், "பிறைமேடை" மாதமிருமுறை

<<Previous

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்