Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Thursday, January 17, 2019 10 Jumad Al-Awal 1440

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, January 30, 2007
வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை நாட்டிலே! கே.எம்.கே.


பிப்ரவரி மாதத்தில் உத்திரப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய பெரிய கட்சிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், உ.பி.யில் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் அரசியல் ஆரூடங்கள் வருகின்றன; ஏடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய யூகங்களைச் செய்திகளாகத் தருகின்றன.

‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்பது தேர்தல் காலத்தில் உறுதிப்படுவதைத் தொடர்ந்து பார்க்கிறோம்.

வாக்காளர்களை அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகள் மூலமாக ஈர்த்திழுப்பதற்கு எல்லா வகையான எத்தனங்களையும் செய்து வருகின்றன.

யாருடைய ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிடும்.

அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளைச் சேகரம் செய்வதற்குக் கடமைப்பட்டிருக் கின்றன. அவைகளின் வேலை அது; ஜனநாயகக் கடமையும் ஆகும்.

இந்த அரசியல் கட்சிகள் சாதியையும், மதத்தையும், மொழியையும், இனத்தையும் தேர்தல் பிரச்சாரத்தில் இழுத்துவிட்டு பிரச்சாரம் செய்யும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது.

பா.ஜ.க. இந்துத்துவம் பேசுவதும், ராமர் கோவில் கட்டுவோம் என்பதும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் செய்வோம் என்பதும் ஓர் அரசியல் கட்சியின் அணுகுமுறை அன்று; தீவிரமான மதவெறியும் இனவெறியும் கலந்த இழிந்த பிரச்சாரம் ஆகும். இத்தகைய பிரச்சாரங்களை உ.பி. மக்கள் இப்பொழுது ஏற்க மாட்டார்கள். மிகவும் பிற்போக்கான மாநிலமாக இருந்து வரும் உபி. மாநிலத்தில் இன்றைக்கு 30 சதவீதம் பேர் வாக்காளர்கள், சாதி மதம் இனம் பேசுவோருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று ஒரு பத்திரிகை ஆய்வு தெரிவித்திருக்கிறது. இது நல்லதொரு செய்தியாகும்.

பா.ஜ.க.வும் அதன் இணைப்பு இயக்கங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்தைக் கூறி தேர்தல் பிரச்சாரம் செய்வதால், அவைகளைப் பின்பற்றி முஸ்லிம் அமைப்புகள் சிலவும், மஸ்ஜித்துகளில் பணிபுரியும் இமாம்களில் சிலரும் இந்துக்களுக்கு எதிரான கருத்தையோ, பத்வா என்னும் பெயரில் அபிப்பிராயத்தையோ தெரிவிப்பது வேண்டாததும் கூடாததும் ஆகும்.

இந்திய ஜனநாயகத்தில் இந்து தொகுதி என்றோ, முஸ்லிம் தொகுதி என்றோ கிடையாது. எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் எல்லா மதங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

இந்துக்கள் இந்து வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்; முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவளிங்கள் என்று பேசுவது இந்திய ஜனநாயகத்திற்கு முரணானதும் எதிரானதும் ஆகும்.

இப்படிப்பட்ட செயல்பாடுகளில் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினர் இறங்கிவிடக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடந்த அறுபதாண்டு கால அரசியல் பணியாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய முஸ்லிம் சமுதாயம், மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இயற்கை அமைப்புகளான மஹல்லா ஜமாஅத்துகளின் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு ஜமாஅத்திலும் பரம்பரையாகவோ, தேர்ந்தெடுக்கப்பட்டோ முத்தவல்லி, நாட்டாண்மை, படேல், காரியக்காரர் என்றெல்லாம் காலங் காலமாக இருந்து வருகிறார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் ஏதேனும் ஓர் அரசியல் இயக்கத்தில் அங்கம் வகிக்கலாம். ஆனால், அவரது அரசியல் ஈடுபாட்டை அவர் தலைமை வகிக்கும் மஹல்லா ஜமாஅத்தின் மீதோ, அந்த ஜமாஅத் மஸ்ஜிது முஸ்லிம்கள் மீதோ ஒருபோதும் திணிக்க மாட்டார். இதுதான் காலங் காலமாகத் தொடர்ந்து வரும் மரபு ஆகும்; சரியான வழியும் ஆகும்.

அதேபோல, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பணியாற்றும் மார்க்க அறிஞர்களான உலமாக்கள் மார்க்க விஷயங்களில் சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்களின் மார்க்க விழகாட்டுதலை மஹல்லாவாசிகள் பின்பற்றி நடப்பது இம்மை மறுமைக்கு மார்க்கம் காட்டுவதாகும். இந்த மார்க்க அறிஞர்கள் தேர்தலில் ஓர் அரசியல் கட்சியைக் குறிப்பிட்டு, அதற்கு வாக்களிக்குமாறு """"பத்வா’’ ஆலோசனை கூறி அறிவிப்பு செய்வது, அவரின் பொறுப்புக்குரிய எல்லை மீறிய செயலே ஆகும். அவரின் அரசியல் ஆலோசனையை மக்கள் ஏற்கிறார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். இவ்வாறு அவர் ஈடுபடும்போது, அவர் கூறும் மார்க்க விஷயங்களை மஹல்லாவாசிகள் மறுதலித்து எதிர்க்கும் நிலையே இறுதியில் மிஞ்சும். உலமாக்கள் தங்களின் மார்க்கக் கடமையில் இருந்து தவறுவதற்கு அவர்களின் செயல்பாடே காரணமாகிவிடுகிறது.

உத்திரப்பிரதேசத்தில் இன்றைக்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவராகியுள்ளனர். உலமாக்கள் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரித்து பத்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், உ.பி. முஸ்லிம்களின் கண்ணியம், மரியாதை, அந்தஸ்து எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

ஆகவேதான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஒன்றை சமுதாயத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதையே மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். ஒன்று, மார்க்க விஷயங்களில் உலமாக்களின் வழிகாட்டுதலை சமுதாயம் ஏற்க வேண்டும்.

இரண்டு, மஸ்ஜிதை மையமாகக் கொண்டியங்கும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகம், அந்தந்த மஹல்லாவாசிகளின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்குக் காட்டும் வழியை அந்த மஹல்லாவாசிகள் பின்பற்றி நடக்க வேண்டும்.

மூன்று, இந்திய ஜனநாயகத்தில் இந்தியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம், அரசியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காட்டுகின்ற பாதையிலும், தேர்தல் காலங்களில் அது எடுக்கும் முடிவுகளின் படியும் நடந்தால்தான், தனது தனித்தன்மையோடும், இஜ்ஜத் என்னும் கண்ணியத்தோடும் இந்த நாட்டில் முஸ்லிம்கள் சுயமரியாதையுடன் வாழமுடியும்! ஜனநாயக முறையில் எல்லாராலும் ஏற்கும் விதத்தில் பிற இயக்கங்களுடன் இணைந்து நாட்டை ஆளவும் முடியும்!

இந்த மூன்று விஷயங்களையும் உ.பி. தேர்தல் நடக்கும் இந்தக் காலகட்டத்திலும் சமுதாய சிந்தனைக்கு முன்வைக்கிறோம்! வாழ நினைப்போருக்கு முன்வைக்கப்படும் வழிதான் இது!

வாழ நினைத்தால் வாழலாம்!

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்