Welcome to the Official Website of Indian Union Muslim League (Tamil Nadu)
நோக்கமும் குறிக்கோளும்
நிர்வாகிகள்
அணிகள்
QM FORUM
Sunday, May 27, 2018 12 Ramadhan 1439

Flash News

................

Watch Video

Click Here

மணிச்சுடர்

Click Here

பிறைமேடை

Click Here

IUML EXHIBITION

Click Here

THE TIMES OF LEAGUE

Click Here

முக்கிய செய்தி
{Click for News Headlines}

<<PreviousNext>>
Tuesday, March 13, 2007
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு திருநெல்வேலி, பொருட்காட்சி திடல், மார்ச் 11, சனிக்கிழமை, 2017 தீர்மானங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு விழா சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு திருநெல்வேலி, பொருட்காட்சி திடல், மார்ச் 11, சனிக்கிழமை, 2017 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு நிறுவன நாள் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநாடாக மார்ச் 10,11-2017 ஆகிய இரண்டு தினங்கள் திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.ம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. வரவேற்றார். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் மொய்தீன் தொகுப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி, முஸ்லிம் இளைஞர் லீக் கேரள தலைவர் செய்யது முனவ்வர் அலி தங்ஙள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரை யாற்றினார்.

மாநாட்டில் சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது, தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், பேராசிரியர் நாகூர் ரூமி, பேராசிரியர் அமுதன் அடிகளார், தமிழ்- அரபி மொழிகளின் ஒப்பாய்வுக்கான அல்லாமா அமானி ஹஜ்ரத் விருது, ஈரோடு மௌலவி உமர் பாரூக் தாவூதிக்கும் ,இஸ்லாமிய அறிவியல் அறிஞருக்கான ஷிஹாப் தங்ஙள் விருது, வழுத்துர் டாக்டர் எம்.ஜே. முஹம்மது இக்பாலுக்கும், முஸ்லிம் லீக் ஊழியர் திலங்களுக்கான காயிதே மில்லத் விருது நெல்லை மௌலானா டி.ஜே.எம். சலாவுதீன் ரியாஜி, மதுரை குலாம் ரசூல், திண்டுக்கல் அப்துல் ரஹ்மான், கிளியனூர் அபுல் ஹஸன், வந்தவாசி பீர் முஹம்மது, மேட்டுப்பாளையம் முஹம்மது குட்டி, லால்பேட்டை அப்துல் கப்பார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திமுக மாவட்ட செயலாளர்கள் இரா. ஆவுடையப்பன், மு. அப்துல் வகாப், சிவபத்மநாபன்,மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. ராம்நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி. எம். மைதீன்கான், பூங்கோதை ஆலடி அருணா, ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தலைவர் புளியங்குடி செய்யது சுலைமான் நன்றி கூறினார்.

இம்மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும்

பொது மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்யும் காலக்கெடு 01.03.2017வுடன் முடிவடைந்து விட்டது. 2017, மே17 அன்று இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.

பொது மருத்துவ நுழைவுக்காக நடுவண் இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்த நுழைவுத் தேர்வுக்கு (ஹஐஞஆகூ) மாற்றாக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களையும், ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகமும் 31.01.2017 அன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்ட மசோதாவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் 27.02.2017 அன்று பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் இது பற்றி முறையீடு வைக்கவில்லை என்பதை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களை முன்னேற்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு நீட் தேர்வு பெருந்தடையாக இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. புதிய நீர் மேலாண்மைக் கொள்கை நெல்லை, தூத்துக்குடி, மற்றும் அண்டை மாவட்டங்களின் குடிநீர் தேவைகளுக்காகவும், விவசாயப்பணிகளுக்காகவும் தாமிரபரணி ஆற்று நீர் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நதிநீரைப் பாதுகாத்து வழங்கிட புதிய நீர் மேலாண்மைக் கொள்கை ஒன்றை உருவாக்கிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்து 60 சதவிதம் பணிகள் முடிந்துள்ள கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழ அரசை இம்மாநாடு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

3. விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் பிரச்சினை முன் மொழிந்தவர்- எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி) தமிழக சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஆண்டுக் கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்படாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்வதால் அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி வருகிறது. விசாரணை கைதிகள் பலர் குற்றச் செயல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என்பது நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

2005 டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அண்மையில் வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இத்தீர்ப்புக்காக 11 வருட காலம் சிறையில் இருந்து அவர்கள் எதிர் காலமே இருண்டு விட்டது.

எனவே நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தண்டனை சிறைவாசிகளைப் பொறுத்தவரை 14 வருடங்களை கடந்துவிட்ட ஆயுள் சிறைவாசிகளை மதம், சாதி, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

4. சிறுபான்மையினர் உரிமை

மத வழிப்பட்ட சிறுபான்மையினர் சமய, கலாச்சார தனித்தன்மைகளுக்கு ஆபத்தாக அமையும் பொதுசிவில் சட்டம் பற்றி அவ்வப்போது பரப்புரை செய்துவரும் மத்திய பா.ஜ.க. அரசு தனது அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும், இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள பொதுசிவில் சட்டம் பற்றிய 44வது பிரிவை அரசியல் சட்டத்திருத்தம் மூலம் நீக்க வேண்டுமெனவும்,

இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கெனத் தனியே 10 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் வழங்க வேண்டும் என நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்திருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

5. விவசாயிகள் எதிர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்

இயற்கை எரிவாயு திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அனுமதிக்க உள்ளது என்ற செய்தி காட்டுத் தீ போல் விவசாயிகள் மத்தியில் பரவியதால் அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பல ஊர்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், மகளிர் மற்றும் மாணவ, மாணவியர் எல்லோரும் வெளிக்கிளம்பி இயற்கை எரிவாயு திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயம் பாழ்பட்டுவிடும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவர் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் அச்சம் மற்றும் சந்தேகங்களை போக்கும் வகையில் விரைவாக அம்மக்களுடன் கலந்துரையாடி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவசர கதியில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் எனவும் இந்த மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

6. சிலெட் தேர்வால் சிறுபான்மை மொழிகளுக்கு பாதிப்பு

தமிழக அரசு நடத்தும் ஸ்டேட் லெவல் எஜுகேஷனல் டெஸ்ட் (சிலெட்) தேர்வில் சமஸ்கிருதம், உர்து, அரபி, மற்றும் தெலுங்கு மொழிகளில் தேர்வு எழுதும் முறை இதுநாள் வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களே கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவராகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 40 க்கும் மேற்பட்ட அரபி பேராசிரியர்களும், 15க்கும் மேற்பட்ட உர்து பேராசிரியர்களும் பணிபுரிகிறார்கள். இத்தகைய பதவிகளுக்கு செல்ல விரும்புவோர் சிலெட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது சிலெட் தேர்வு எழுதுவதற்கு உர்து மற்றும் அரபி மொழிகள் சேர்க்கப்பட வில்லை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளே சிலெட் தேர்வுக்குரிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது சிறுபான்மை மொழிக்கிடையே காட்டப்படும் பாரபட்சமாகவும், அநீதியாகவும் கருதுகிறோம்.

எனவே தமிழக அரசு சிலெட் தேர்வில் மீண்டும் உர்து மற்றும் அரபி மொழிகளையும் சேர்த்து சிறுபான்மை மொழிகளின் பாதுகாப்புக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

7. பாஸிஸத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு, பாஸிஸம் போன்ற எதேச்சதிகாரக் கொள்கைகளை முன்னுறுத்தி, நாட்டு மக்களை மதரீதியாகப் பிளவுப்படுத்திவருவது அனைத்து சமுதாய மக்களையும் வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது.

இந்திய பாரம்பரியத்தில் பன்முகத்தன்மையும், வேற்றுமையில் ஒற்றுமையும், சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்க முடியாத கூறுகளாகும். இந்தியாவில் உள்ள பெரும்பான்மையினரின் பெருமை, தனது சிறுபான்மையினரை மதிக்கும் தன்மையில் இருக்கிறது என்பது உலக வரலாறு தரும் படிப்பினையாகும். ஆனால, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, சிறுபான்மையினரின் சமய , கல்வி, கலாச்சார, மொழி அம்சங்களில் பாரபட்சத்துடனும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்திரவாதம் தந்திருக்கும் உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலும் செயல்படுவதை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென தேசிய மைனாரிட்டி கமிஷன் உறுப்பினர்கள் எழுவரில் ஆறுபேர் ராஜிநாமா செய்தும், இதுவரை காலி இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை.

அலிகர் பல்கலைக்கழகம் , ஜாமிஆ மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்து நீக்கும் வகையிலும், மேற்கு வங்காளம் , பீகார், கேரளா மாநிலங்களில் உருவாக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகங்களின் கிளைகளை செயல்படவிடாமல் முடக்கியும், முஸ்லிம் கிறிஸ்துவர் தனியார் சட்டங்களைக் குலைக்கும் வகையில் குறுக்கீடுகள் செய்தும்,

சிறுபான்மையினருக்கு எதிராகப் பகையுணர்ச்சியைக் கிளறிவிட்டு, பெரும்பான்மையினர் மத்தியில் விரோதத்தை வளர்த்திடும் சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதை உடனடியாக நிறுத்திட வேண்டுமென இந்த மாநாடு வற்புறுத்துகிறது.

வருங்காலத்திலும் இதே போக்கை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொடருமானால், நாட்டிலுள்ள ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமூக நீதி கொள்கைகளுக்குப் பாடுபடுகின்ற அரசியல் இயக்கங்களின் உறுதுணையோடு, சிறுபான்மையினர் அனைவரையும் ஓரணியில் திரட்டி தேசிய அளவில் மாபெரும் போராட்டம் நடத்துவது என்று இந்த மாநில மாநாடு தீர்மானிக்கிறது.

8.தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் விலைவாசி உயர்வு, கொலை- கொள்ளை, குடிதண்ணீர் தட்டுப்பாடு, நியாயவிலை கடைகளில் பொருள்யின்மை, சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கடமையை நிறைவேற்ற முடியாத ஜனநாயக படுகொலை, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் நிலை நிறுத்த முடியாத கையகலாகத்தன்மை என அனைத்து நிலைகளிலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செயலிழந்து நிற்கிறது.

இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அனைத்து தரப்பினரும் விரும்பும் சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழக முன்னேற்றம் அடைந்திட திமுக தலைமையில் ஜனநாயக, சமய-சார்பற்ற, சமூக நீதி கொள்கைகளில் நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. இதற்கு அச்சாரமாக சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

<<PreviousNext>>

Show News from

Image Gallery


More Links


All India


Live VideoM.P.SpeechOur News papers

இ.பேப்பரில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Click Here to read E- Paper


முகப்பு | வரலாறு | முக்கிய செய்தி | சேவை திட்டங்கள் | நோக்கமும் குறிக்கோளும் | தேசிய நிர்வாகிகள் | மாவட்ட நிர்வாகிகள்