முக்கிய செய்தி

பாஜகவை எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ்.. கூட்டணி வெல்லும்.. காதர் மொய்தீன் நம்பிக்கை

பாஜகவை எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ்.. கூட்டணி வெல்லும்.. காதர் மொய்தீன் நம்பிக்கை
சென்னை: பாஜகவையும் அதன் கொள்கைகளையும் எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ். எனவே வரும் லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். பேராசிரியர் காதல் மொய்தீன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதன் விவரம்:

கேள்வி: ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் இந்த தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்? பதில்: ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பது உண்மைதான் அதே வேளையில் திமுகவில் கருணாநிதி இல்லையென்றாலும் அவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு வலுவோடும் திறனோடும் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு மாற்று யாரும் இல்லை அவரது இடத்தை யாரும் நிரப்பவும் இல்லை.

கேள்வி: திமுக கூட்டணியில் உங்களுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன? பதில்: வழக்கம்போல ஒரே ஒரு இடம் ஒதுக்கபப்ட்டுள்ளது. கேள்வி: அப்படியென்றால் வழக்கம்போல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவீர்களா? பதில்: இல்லை இம்முறை ஏணி சின்னத்தில் போட்டியிடப் போகிறோம். கேள்வி: ஒரு சீட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறீர்கள் அது மன வருத்தமாக உள்ளதா? நிச்சயமாக இல்லை. எங்களுடைய பலமும் அவ்வளவுதான். ஆகவே ஒரு சீட் வழங்கப்பட்டது நியாயமானதுதான்.

கேள்வி: எந்த தொகுதியை கேட்டுள்ளீர்கள்? பதில்: ராமநாதபுரம் தொகுதியை கேட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து எங்களுக்கு எந்த இடம் என்பதை திமுக ஒதுக்கும். கேள்வி: நாட்டில் எண்ணற்ற முஸ்லிம் அமைப்புகள் உள்ளன, ஆனால் அனைத்தும் அமைப்புகளும் பிரிந்தேதான் உள்ளீர்கள் இது பலவீனம் இல்லையா? பதில்: ஜனநாயக நாட்டில் பல்வேறு கருத்துகளை பலரும் கொண்டிருக்கையில் அனைவரும் ஒரே கட்சியில் இருப்பது என்பது சாத்தியம் இல்லாதது. ஒரே கொள்கை கொண்டவர்களே ஒரு கட்சியாக இருப்பது இல்லை. அது சாத்தியமும் இல்லை. கேள்வி: திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் நிலை என்ன அவர்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறார்கள்? பதில்: அவர்களும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை திமுக முடிவு செய்யும். கேள்வி: தற்போது இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் டீமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தேர்தலில் அவர்களுக்கு பெரிய பலம்தானே?

பதில்: இரட்டை இலை ஏற்கனவே அதிமுகவுக்கு உரிய சின்னம்தான், இதில் அவர்களுக்கு புதிதாக என்ன பலம் கிடைத்து விடும். இரு பிரிவுகளாக பிரிந்து தங்களுக்கே சின்னம் என்று கேட்டு வந்தார்கள் இப்போது ஒரு பிரிவுக்குத்தான் அந்த சின்னம் என்பது தெளிவாகியுள்ளது. இதில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்.

கேள்வி: அரசு இப்போது மக்களுக்கு வழங்கும் ரூ. 2000 தேர்தலில் அவர்களுக்கு வாக்குகளை பெற்றுத்தரும் பெருவாய்ப்புதானே? பதில்: அரசு பல நேரங்களில் இப்படி மக்களுக்கு ஏதாவது செய்வது வழக்கம்தானே. இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. கேள்வி: இது தேர்தல் நேரத்தில் வழங்கபடுகிறது என்பதால் வாக்காளர்களை கவருவதற்கான யுக்தி என்று உங்கள் கூட்டணி கட்சிகள் கூறுகிறார்களே? பதில்: இந்த பணத்தை வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்பது என்ன நிச்சயம். வாக்காளர்கள் இப்போது தெளிவாக உள்ளனர். கேள்வி: தேமுதிகவும், பாமகவும் திமுக கூட்டணிக்கு வராதது திமுக கூட்டணிக்கு பலவீனம்தானே? பதில்: இதில் பலவீனம் ஒன்றுமில்லை. அவர்கள் கடந்த தேர்தலில் எங்களோடு இல்லை. அதுபோல இப்போதும் எங்களோடு இல்லை. பழைய நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். கேள்வி: பழைய நிலையில் இருந்ததால்தான் திமுகவுக்கு ஒரு சதவீதத்தில் ஆளும்கட்சி என்ற வாய்ப்பை இழந்தது அதுபோல இந்த தேர்தலிலும் நடக்கும் என்கிறீர்களா? பதில்: இல்லை இல்லை (உடனடியாக மறுக்கிறார்) ஆட்சியில் அமர்வதும், இல்லாமல் இருப்பதும் தேர்தலின் முடிவை பொறுத்தது. அதற்காக இவர்கள் இல்லாததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம், இவர்கள் இருப்பதால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது. வாக்காளர்கள் யாரை விரும்பி வாக்களிக்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் கேள்வி: இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கான மிகபெரிய சவால் என்றால் எதைக் கூறுவீர்கள்? பதில்: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைதேர்தலில் போட்டியிட்டபோது ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியது அதில் 92% மக்கள் பணம் வாங்கி கொண்டு வாக்களிப்பதில் என்ன தவறு என்று கேட்டார்கள்? 62% மக்கள் பணம் வாங்கி கொண்டுதான் வாக்களிப்போம் என்றார்கள். இந்த மனநிலை இன்று எப்படியுள்ளது என்பதில்தான் பெரிய சவாலே உள்ளது கேள்வி: 10 % இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக கடுமையாக எதிர்க்கிறது ஆனால் காங்கிரஸ் வரவேற்கிறது இந்தப் பிரச்சனை தமிழ்நாட்டுல ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா? பதில்: தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும்போது இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வராது ஆகவே இதைப் பற்றி கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. கேள்வி: பாஜக என்று சொன்னவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன? பதில்: ஒரு மதவாத கட்சி கேள்வி: பாஜக மதவாதக் கட்சி என்றால் முஸ்லிம் லீக் மாதிரியான கட்சிகளை என்னவென்று சொல்வீர்கள் ? பதில்: நல்ல கேள்வி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது வரலாற்றில் பதிந்து போன பழைய பெயர். எப்படி கம்யுனிஸ்ட், திமுக, காங்கிரஸ் போன்று பழைய பெயர்கள் உள்ளதோ அதுபோன்று அப்போதே வைக்கப்பட்ட பெயர். ஆனால் எங்கள் கொள்கைகள் மதவாதக் கொள்கைகள் அல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தின் உரிமைகளும் சமுதாய உரிமைகளும் பாதுகாக்கப் படவேண்டும் என்பது தான் எங்களது கொள்கை. இந்திய ஒருமைப்பாடு. தேச நலன் போன்றவைதான் நாங்கள் நாடுவது. எங்களது கட்சியில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல அனைத்து மதத்தினரும் உள்ளனர். கேள்வி: திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எப்படி கூறுகிறீர்கள் ? பதில்: தமிழகத்தை பொறுத்தவரை மீத்தேன், ஹைட்ரோகார்பன் என்று மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு எதிரான திட்டங்களாக உள்ளது. பாஜக அரசின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஆகவே அவர்களை எதிர்ப்பதற்கு திமுகதான் சரியான சாய்ஸ் ஆகவே மக்கள் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள்.

 https://tamil.oneindia.com/news/chennai/indian-union-muslim-league-leader-speaks-if-bjp-is-religious-based-political-party-342960.html?fbclid=IwAR0jOu2L2zsjbs7X9Ye7KzCNVYyGonTGhSmE3ncWvA-cjNdQRL2MWRnrVuA