முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளையொட்டி பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் பிறை நட்சத்திரக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளையொட்டி பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் பிறை நட்சத்திரக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன நாளையொட்டி தலைமை நிலையமான சென்னை காயிதே மில்லத் மன்ஜிலில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் பிறை நட்சத்திரக் கொடியினை ஏற்றி வைத்தார்கள். 
 

சுதந்திரத்துக்கு பின்னர் `தேசப் பிரிவினை’ எனும் சுனாமியில் பல்லாயிரம் பேர் உயிரிழந்து, வீடிழந்து, வாழ்க்கையை இழந்து தங்களின் சொந்த மண்ணிலே ஏதிரிகளாக நிறுத்தப்பட்ட போது, பச்சிளம் பிறைக் கொடியை வானுயர உயர்த்தி நிறுத்தி சமுதாயத்தின் கவசமாக நின்றதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற இந்த தாய்ச்சபை தானே. சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சாசனம் வரையறுக்கப்படும் வேளையில் சமுதாயத்தின் போர்வாளாக, அரசியல் சாசன சபையிலே வீரச் சமர் புரிந்து இந்த சமுதாயத்தின் ஷரீஅத் சட்டங்களுக்கும், கலாச்சார தனித் தன்மைக்கும் பங்கம் ஏற்பட்டு விடாமல், அவற்றை முஸ்லிம்களின் அடிப்படை அரசியல் சாசன உரிமையாக மாற்றிய பெருந்தகை தாய்ச்சபையின் நிறுவனர், கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் என்பதுதானே வரலாறு. இந்தியாவின் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான `பொது சிவில் சட்டம்’ கொண்டு வர அரசியல் சாசன சபையில் முயற்சி நடந்தபோது, அதை மிகுந்த அறிவாற்றலுடனும், தீரத்துடனும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெற்றவரும், கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களே. இன்றுவரை காவிக் கூட்டம் பொதுசிவில் சட்டத்தை நம் மீது திணிக்க முடியாமல் திணறுவதன் காரணம் அன்று அரசியல் சாசன சபையில் தாய்ச்சபை எடுத்த உறுதியான நிலைப்பாடுதானே.

காயிதெ மில்லத் அவர்களின் அடிச்சுவட்டில் அவருக்குப் பின் தலைமையேற்ற குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் அவர்களும், ஷாபானு வழக்கின் மூலம் மீண்டும் ஷரீஅத் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்ட போது சிங்கமென சீறி எழுந்தார். ஷரீஅத் சட்ட பாதுகாப்புக்கென பாராளுமன்றத்திலே தனிநபர் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து பத்து கோடி முஸ்லிம்களின் ஒட்டு மொத்தக் குரலாய் கர்ஜனை செய்ததன் பலனாகவே ஷரீஅத் சட்ட பாதுகாப்புக்கான அரசு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமும் இயற்றப் பட்டது என்பதுதானே வரலாறு.

நம் தமிழக தாய்ச்சபைத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் நாடாளுமன்றத்தில் இடைவிடாது இடஒதுக்கீடு குறித்து வாதாடியதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைந்தபோது அதில் அங்கம் வகித்த தாய்ச்சபை, குறைந்தபட்ச செயல் திட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் இடஒதுக்கீட்டை வலியுறுத்தியதன் விளைவாகத் தானே `நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷனும்’ `ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும்’ அமைக்கப் பட்டது.

`இந்திய முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மிகக் கீழான நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்’ - என்ற நிதர்சன உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டு வெளிக் கொணர சச்சார் கமிஷன் தானே உதவியது? அதன் பலனாகத்தானே மிஸ்ரா கமிஷன் முஸ்லிம் சமூகத்துக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் அனைத்து கல்வி, வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பரிந்துரை செய்தது. இந்த இடஒதுக்கீடு போராட்டம் இன்று நேற்று நடப்பதா என்ன?

சுதந்திர இந்தியாவில் கண்ணியமிகு காயிதெ மில்லத் காலம் தொடங்கி இன்று நம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிபு வரை தலைமை ஏற்று நடத்திய தாய்ச்சபையின் போராட்டங்கள் தானே இன்று நாடு முழுவதும் இச் சமுதாயத்திற்கு ஒரு நல்வழி ஏற்படுத்த வேண்டுமென மாற்று சமூக மக்களையும் பேச வைக்கிறது.

தமிழகத்தில் உலமாக்கள் நல வாரியம் பெற்றோம். 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றோம். கல்விச் சீர்திருத்தம் என சமச்சீர் கல்வி வந்தபொழுது உர்தூ மொழிக்கு ஏற்பட்ட ஆபத்தினைக் களைந்தோம். உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக `கட்டாய திருமண பதிவு சட்டம்’ முஸ்லிம் சமூகத்துக்கும் பொருந்தும் என்ற நிலை வந்த பொழுது, மஹல்லா ஜமாஅத்துகளின் `தப்தர்’ பதிவை அரசு பதிவாக ஏற்க வேண்டுமென அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளையும் இணைத்துப் போராடி வென்றோம். பள்ளிவாசல்களுக்கும், கபரஸ்தான்களுக்கும் சுற்றுச்சுவர், பட்டா என்பதெல்லாம் அரசே முன் வந்து செய்யும் நிலையை உருவாக்கியது தாய்ச்சபைதான் என்பதை மஹல்லா ஜமாஅத்துகள் பெருமையோடு பறை சாற்றுகின்றனவே.

அரசியல் களத்தில் பணியாற்றி, தேர்தல் நேரத்தில் ஓட்டு வேட்டையாடும் வெறும் அரசியல் கட்சியா முஸ்லிம் லீக்? கடுகளவு சாதனையை மலையளவு காட்டும் விளம்பர கலாச்சாரம்தானே அரசியல் கட்சிகளின் அடிப்படை. அந்த அடிப்படையை தகர்த்தெறிந்து, தான் ஆற்றிய அத்தனை பணிகளையும் சாதனைகள் என்றெண்ணாமல், கடமை யாற்றும் போர் மறவர்களின் அணிவகுப்பு தானே தாய்ச்சபை. மார்க்கம் போதிக்கும் மஹல்லா ஜமாஅத்துகளின் கட்டமைப்பை கட்டிக் காத்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்வது தானே நம் தாய்ச்சபை.

முஸ்லிம் லீகின் எதிரிகளாக தம்மை முன் நிறுத்திக் கொண்டவர்கள்கூட, சில தனிநபர் வெறுப்பைத்தான் உமிழ்கிறார்களே தவிர தாய்ச்சபையை களங்கப்படுத்த துணிந்ததுண்டா? களங்கப்படுத்தத்தான் முடியுமா? `முஸ்லிம் லீக்’ கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யானை. அதை சில அறிவுப் பார்வைத் திறன் அற்றவர்கள் தடவிப் பார்த்து `முறம்’ என்பார்கள், `துடைப்பம்’ என்பார்கள், `சுவர்’ என்பார் கள். `தூண்’ என்பார்கள். அந்த அறிவிலிகளை புறந்தள்ளுங்கள்.

முஸ்லிம் லீக் எனும் இந்த தேன் கூட்டிலே, தேனீக்களாய் பல்லாயிரம் லீகர்கள் பாடுபட்டு சேர்த்து வைத்த தேனைக் குடிக்க வந்த குரங்குகள், அது கிட்டாமல் போனதால் குதர்க்கம் பேசுகின்றன. ஆனால், இச்சமுதாயத்தின் வாழ்வும், வளமும் தான் இலட்சியம் என தாய்ச் சபையின் இரத்தமும் சதையுமாக உள்ள எனதருமை லீகர்களே! திக்கெட்டிலும் கொட்டு முரசு கொட்டி, ஓங்கி உரத்த குரலில் சொல்லுவோம், எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் தாய்ச்சபையின் தங்கு தடையில்லா வளர்ச்சிதான் என்று. தமிழகத்தின் பதினோராயிரம் மஹல்லாக்களிலும், பச்சிளம் பிறைக்கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்வோம். ஏதுமில்லா ஏதிலிகளாய் நிறுத்தப்பட்ட நம் மக்களின் கண்ணியமும், வாழ்வும், உரிமையும், மானமும் காப்போம்! தாய்ச்சபையின் மகுடமும் காப்போம்.