முக்கிய செய்தி

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கம்

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கம்
வீடு தேடி வருவோருக்கு தேவை அறிந்து உதவும் தயாளத்தன்மை
குடும்ப செலவினங்களுக்காக நகைகளை அர்ப்பணித்த செல்வ சீமாட்டி
விருந்தோம்பலில் தொலைநோக்குடன் செயல்படுபவர்
 நற்பண்புகளின் உறைவிடமாக திகழும் நல்ல பெண்மணியின் உதவிகளுக்கு
பகரமாக எதையும் செய்யமுடியவில்லையே என்பது வருத்தம் அளிக்கிறது
அம்மையாரின் சேவைகளை நினைவு கூர்ந்து நீங்கள் செய்த பிரார்த்தனைகள் நிச்சயமாக மண்ணறையிலும், மறுமையிலும் அவரது தரத்தை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
துணைவியார் இரங்கல் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உருக்கம்

திருச்சி, நவ. 05-
 நற்பண்புகளின் உறை விடமாக திகழும் நல்ல பெண்மணியின்
உதவிகளுக்கு பகரமாக எதை யும் செய்யமுடிய வில் லையே என்பது வருத்தம் அளிக்கிறது என்றும், அம்மையாரின் சேவைகளை நினைவு கூர்ந்து நீங்கள் செய்த பிரார்த்தனைகள் நிச்சயமாக மண்ணறையிலும், மறுமையிலும் அவரது தரத்தை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை என்று திருச்சியில் நடைபெற்ற அவரது  துணை வியார் இரங்கல் கூட் டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்டம் சார்பில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் மனைவி ஹாஜியானி லத்திபா பேகம் மறைவுக்கு து ஆ மஜ்லிஸ் மற்றும் அனைத்து கட்சிகள் பங்கேற்ற  நினைவேந்தல் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள  டி 10 ஹோட்டலில் உள்ள சி.எம். ஹாலில் (03-11-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை  நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல இறைவனின் திருப்பெயர் போற்றித் துவக்குகிறேன்.

அம்மையாரின் சேவைகளை நினைவு கூர்தல்

எனது துணைவியார் ஹாஜி யானி லத்தீஃபா பேகம் அவர்கள், இறைவனின்  கட்டளையை ஏற்று, தனது 72ஆம் வயதுடன் இந்த உலகை விட்டும் மறைந்திருக்கிறார்கள். அதனையொட்டி, மறைந்த அம்மையாரின் சேவைகளை நினைவுகூர்ந்தும், அவர்களது குடும்பத் தாராகிய எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாகவும் இந்த இரங்கல் கூட்டம் நடத்தப் பட்டிருக்கிறது. இதில் அனைவரும் உருக்கமாக உரையாற்றி, அம்மையாரின் சேவைகளை நினைவுகூர்ந்து, அவர்களின் மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காகப் பிரார்த் தனைகளும் செய்தி ருக்கிறீர்கள். இதற்காக நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக் கிறேன்.

அவரவர் மத, இன உணர்வுகளை மதித்து நடந்தால் நாட்டில் ஜாதி, மத வேறுபாடுகள் இருக்காது

இங்கே பல்வேறு சமுதாய இயக்கங்கள், மதங்கள், ஜாதிகள், அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எல்லோரும் குழுமியிருக் கிறீர்கள். நான் பல இடங்க ளிலும் கூறி வருவதையே இங்கும் கூற விரும்புகிறேன். நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். ஒரு காலத்தில் உலகமே ஒரே பேரரசின் கீழ் இருந்தது.  ரோமானிய, கிரேக்க, ஸ்பானிஷ், பிரிட்டிஷ் எனப் பல பேரரசுகள்,  சாம்ராஜ்யங்கள் உலகம்  முழுவதையும் மொத்தமாக ஆட்சி செய்திருக்கின்றன. அந்தக்  காலமெல்லாம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலை இல்லை. எனவே பூகோள அடிப்படையில் இந்தியாவில் இருப்பதால் நாம் எல்லோரும் இந்தியர்கள். பிறகுதான் நான் இஸ்லாமைப் பின்பற்றுவதால் முஸ்லிம் என்றும், இங்கிருக்கும் இதரர் அனைவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்து, கிறிஸ்துவர் என்றும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இந்த அடை யாளங்களை முறையாக அந்தந்த இடத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளும் வரை நமக்கிடையில் சர்ச்சைகளும், தேவையற்ற மோதல்களும் வர வாய்ப்பே இல்லை. ஆக, இந்தியன் என்ற ஒரே அடையாளத்துடன் நாம் - அவரவர் மத, இன உணர் வுகளை மதித்து நடப் போமேயானால், இந்த நாட் டில் மத வேறுபாடு, ஜாதி வேறு பாடுகள் இருக்காது. அவை அடியோடு களையப் படும்.

இறைத்தூதர் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள்

இதைத்தான் -ஓர் இந்தியன் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர்கள் எங்களுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள். அதனடிப் படையில்தான் நாங்கள் சென்று கொண்டி ருக்கிறோம். நான் ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்தின்  அடிப்படையில், இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்கள். அந்த வழிமுறையை எங்கள் இறைநேசர்கள், இமாம்கள், இன்றைய மார்க்க அறிஞர் களான உலமாக்கள் எங்களு க்குக் கற்பித்திருக் கிறார்கள். அதைப் பின்பற்றி நாங்கள் நடக்க முயற்சிக்கிறோம். அவ்வளவுதான். ஆக, """"அவர் சிக்கனமாக இருக்கிறார்... எளிமையாக இருக்கிறார்..."" என்பதெல்லாம் இயல்பில் உள்ளவையே. எதைக் கற்றுள்ளோமோ அதை வாழ்வியலாக்கிக் கொண்டு ள்ளோம். இதில் தனியாகச் சிறப் பித்துக் கூற ஒன்றும் இல்லை.

அனைவருக்கும் உணவு சமைத்து வழங்கி உபசரிக்கும் எனது தாயார்

மறைந்த என் துணைவியார் பற்றிச் சொல்வதென்றால், சொல்வதற்கு நிறைய இருக்கிறது. எங்கள் கிராமம் திருநள்ளூர். சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கு ஒரு பஞ்சாயத்து என்ற நடைமுறையிலேயே எங்கள் கிராமமும் இருந்தது.  எங்கள் கிராமத்தில் இருந்த சுமார் மூவாயிரம் குடும்பங்களுள் - ஏறத்தாழ நாற்பதிலிருந்து ஐம்பதுக்குள்தான் முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்தோம். தற்போது வெறு மனே நான்கைந்து குடும்பங் கள்தான் உள்ளன. அன்று அங்கிருந்த நாற்பது ஐம்பது முஸ்லிம் குடும்பங்கள் தவிர ஏனையோர் அனைவரும் வெவ்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களெல்லாம் தங்கள் குடும்பம், தொழில் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் எங்கள் தந்தையிடம்தான் வந்து ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வார்கள். அப்படி எங்கள் வீட்டைத் தேடி வந்து செல்லக் கூடிய மக்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் தம்முள் ஒருவராகக் கருதும் வழமையில் நாங்கள் இருந்ததால், எங்கள் தாயார் அவர்கள் அனைவருக்குமே உணவு சமைத்து வழங்கி உபசரிப்பார்கள்.

மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் எங்கள் வீடு

எங்கள் குடும்பத்துடன், எங்கள் ஊர் மக்களுக்கு இருந்த தொடர்பு அழகானது. 1949இல் நாங்கள் திருச்சிக்குக் குடிபெயர்ந்து வந்த நேரத்தில், எங்கள் கிராமத்திலிருந்து திருச்சிக்கு வந்து செல்லக்கூடிய - தேவர்,  உடையார் உட்பட பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் எங்கள் வீட்டில்தான் வந்து தங்கிச் செல்வார்கள். அப்படியொரு நாள் நான் கண்ட காட்சி... என் தந்தை அதிகாலைத் தொழுகையைத் தொழுது கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டில் தங்கியிருந்த கோவிந்த சேரர் என்பவர் -அந்த அதிகாலையிலேயே குளித்து விட்டு, நிலைக்கண்ணாடியைச் சுற்றி வந்து, இரு கைகூப்பி வணங்கி வழிபட்டுக்  கொண்டிருந்தார். அதே நேரத்தில் அங்கே தங்கியிருந்த ஆரோக்கியசாமி உடையார் என்ற கிறிஸ்துவரும் அதே நேரத்தில் எழுந்து, தமது கிறிஸ்துவ மத வழக்கப்படி ஜெபம் செய்து கொண்டிருந்தார். இவையத்தனையும் எங்கள் வீட்டில்தான் நடந்தன. அங்கே எங்களுக்கிடையில் எந்த வேறுபாடும் தென்படவில்லை. அப்படிப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை கூட எங்களிடையே எழுந்ததில்லை.

வீடு தேடி வருவோரை உபசரிக்கும் எனது துணைவியார்

அதே பழக்கவழக்கத்தை, நான் திருமணம் செய்த பிறகு எனக்கு வாய்த்த இந்த அம்மையார் அப்படியே புரிந்துகொண்டு, தன் பழக்க வழக்கத்தையும் அவ்வாறே அமைத்துக் கொண்டு, இன்முகத்துடன் வாழ்க்கை நடத்தினார். அதைத்தான் இங்கே தம்பிமார்கள் எடுத்துக் கூறினர். நான் இருந்தாலும்,  இல்லாவிட்டாலும் எங்களைத் தேடி எல்லோரும் வருவர், போவர். அவர்களுக்கு அந்த நேரங்களில் தேவையான உணவுப் பதார்த்தங்களை ஏற்பாடு செய்து, அழகாக உபசரிக்கும் பணியை இந்த அம்மையார் குறைவின்றிச் செய்து வந்தார்கள்.

திருமண மண்டபமாக திகழும் எங்கள் வீடு

எங்கள் வீட்டு பல நேரங்களில்  திருமண மண்ட பமாகவும் இருந்திருக்கிறது. எங்கள் வீட்டுக்கருகே சேரி இருந்தது. அங்கிருந்த மக்கள் திருமணம்  செய்வதற்காக எங்கள் இல்லத்தைத்தான் நிகழ் விடமாக்கிக் கொள் வார்கள். திடீரென எங்கி ருந்தாவது நாங்கள் வீட் டிற்கு வரும்போது, அங்கே யாருக்காவது திரு மணம் நடைபெற்றுக் கொண் டிருக்கும். என் தாயார் வசித்து வந்த பீமநகர் வீட்டிலும் இதுதான் வழமையாக இருந்து வந்தது. சேரிப் பகுதியில் யாருக்காவது பிரசவ மானால், அந்நேரத்தில் என் மனைவி அங்கு சென்று ஓதிப் பார்ப்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் சுகப் பிரசவ மாகக் குழந்தை பிறக்கும். இந்தச் செயலை என் துணைவியார் மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தார்கள்.

இங்கே பலரும் குறிப்பிட்டதைப் போல நான் ஒன்றும் பெரிய வசதி படைத்தவனெல்லாம் இல்லை. என் துணைவியார்  எம்.கே. குடும்பத்துப் பெண்மணி. அங்கிருந்த இப்றாஹீம் என்ற பெரியவர் சேர்மனாக இருந்தார். அப்துஸ் ஸலாம் என்பவர் பாராளுமன்ற உறுப் பினராக இருந்தார். எங்கள் எம்.கே. குடும்பம், நானா மூனா குடும்பம், வி.எஸ். குடும்பம், கலீபுல்லாஹ் குடும்பம் என இந்தக் குடும்பங்கள் எல்லாம் பெரிய குடும்பங்கள்.

வசதிவாய்ப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்

அப்படியான வசதிவாய் ப்புள்ள குடும்பத்திலிருந்து வந்த என் துணைவியார் நூற்றுக்கணக்கான சவரன் தங்க நகைகளைக் கொண்டு வந்திருந்தார். அவை எவ்வளவு எடை, என்னென்ன நகைகள்  இருந்தன என்றெல்லாம் நான் ஒருபோதும் விசாரித்தது கூட இல்லை. அந்த நகைகளிலிருந்து அடிக்கடி விற்றுத்தான் எங்கள்  குடும்பச் செலவு ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் வீடு கூட அந்த நகையை விற்றுக் கட்டப்பட்டதுதான். குழந்தை களைப் படிக்க வைப்பதற்காக அவ்வப்போது செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நேரத்தில் என்னிடம் பெரிதாகப் பணமெல்லாம் இருக்கவில்லை. அக்காலத்தில் - அதாவது 1965இல் நான் கல்லூரிப் பணியின் மூலம் பெற்ற மாத ஊதியம் மூன் னூற்று எட்டு ரூபாய் மட்டும் தான். அன்றாடச் செலவினங் களுக்கே அத் தொகை சரியாக இருக்கும். கூடுதலான செல வுகளுக் கெல்லாம் எதுவுமே கையிலிருக்காத அக்காலத்தில் இந்த அம்மையாரின் நகை கள்தான் அவ்வப்போது செலவுத் தேவைக்காக விற்கப் பட்டன. அப்படி விற்கப்பட்ட நகைகள் ஏராளம். இத்தனை செலவினங் களுக்குப் பிறகும், தான் மறைந்த இந்த நேரத்திலும் 60 சவரன் நகை வைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அதை என் மூன்று மருமகள்களையும் பகிர்ந்து கொள்ளச் சொல்லி யாகிவிட்டது.

அரசியல் -  அறிவுரைகள்

அரசியல் பேசுவதாகட்டும், அறிவுரைகள் வழங்குவதா கட்டும்... ஜனாதிபதி அப்துல் கலாம் போலத்தான் அவர் செயல்பட்டார். நான் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில் ஒருமுறை விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அப்போது நாடாளுமன்ற உறுப் பினர்களான நாங்கள்  எங்கள் குடும்பத்தினரையெல்லாம் அழைத்துச் சென்றோம். அப்படிச் சென்றபோது. அங்கே ஜனாதிபதி அப்துல் கலாம் நின்றுகொண்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களான அத்வானி, வாஜ்பேயி, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் என எல்லாத் தலைவர்களும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். நான் ஒருபுறம் அங்கே சிலரைப் பார்த்துப் பேசிக் கொண் டிருக்க, இந்த அம்மையார் அங்கிருந்த அத்வானி, வாஜ்பேயி ஆகியோரைப் பார்த்து, அவருக்குத் தெரிந்த ஹிந்தி, உர்தூவில் சுகம் விசாரித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு, ஏதோ நீண்ட காலமாக அரசியலில் இருந்து, அனைவரையும் பார்த்தறிந்து பேசுவது போல இருந்தது அந்தக் காட்சி.

ஆலிம்கள் - கட்சிக்காரர்கள்

அதுபோல, மார்க்க அறிஞர்களான ஆலிம்கள், கட்சியி லுள்ளவர்கள் என யாராவது வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். அந்நேரங்களில் நான் வீட்டில் இருப்பேன், இல்லாமலும் இருப்பேன். அது அங்கு ஒரு குறையாகவே இருக்காது. அப்படி வருபவர்களின் தேவையறிந்து, அவர்களுள் யாருக்காவது படிப்பு, மருத்துவம் என எதற்குத் தேவை யிருந்தாலும் இயன்றளவு வழங்கி உதவி செய்து கொண்டிருப்பார். அப்படி வருபவர்கள் யாராயினும் அவர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்காமல் அனுப்புவதே இல்லை. நானே கூட சில பல நேரங்களில் என் துணைவியார் எதிர்பார்த்திராத நிலையில் நான்கைந்து பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன். உணவு நேரம் வரும்போது, இவர்களுக்கு எப்படி சமைத்துக் கொடுப்பது என ஒருபக்கம் நான் சிந்தித்துக் கொண்டி ருப்பேன். ஆனால் மறுபுறமோ - அந்தக் குறுகிய நேரத்தில் எப்படித்தான்  சமையல் நடந்திருக்குமோ தெரி யாது... அவர்களுக்கு மணக்க மணக்க பிரியாணி சமைத்துப் பரிமாறுவார். """"கூப்பிட்டு வந்தா யிடிச்சில்லே...? உட்கார வையுங்கள்! அவங்களுக்கு வேண்டியது எல்லாம் சமச்சி வச்சிருக்கேன்..."" என்று கூறி, இன்முகத்துடன் உபசரிப் பார்கள்.

இ.அஹ்மத் ஸாஹிப் - விருந்தோம்பல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் மத்திய இரயில்வே இணைய மைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில், அவரை வரவேற்று ஒரு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றது. பின்னர்,  இனாம்குளத்தூரில் ஒரு மத்ரஸா கட்டிடத்தைத் திறந்து வைக்க அவரை அழைத்துச் சென்றோம். அன்றிரவு எங்கள் இல்லத்தில் அவர்களை உணவுண்ண அழைத்திருந்தேன். என் துணை வியாரிடமும் கூறினேன். """"எத்தனை பேர் வருவாங்க...?"" என்று அவர் கேட்க, """"என்ன...? அவர் வருவார்... அவரோடு கட்சிக் காரர்கள் ஒரு நான்கைந்து பேர் வருவாங்க... அதிகபட்சம் ஒரு பத்து பேர் வரலாம்!"" என்று கூறிவிட்டேன். """"மந்திரி வந்திருக் காருங்கிறீங்க... பத்து பேர்தான் வருவாங்கங் கிறீங்களே...?"" என்று கேட்டுவிட்டுச் சென்று விட்டார். இ.அஹ்மத் ஸாஹிப்  அவர்களும் இரவு 07.30 மணிக்கு வந்தார். அவருடன் இரயில்வே காவல்துறையினர் மட்டுமே 30 பேர் வந்திருந்தனர். நம்ம கட்சிக்காரர்கள்  15 முதல் 20 பேர் வந்திருந்தனர். மொத்தமாக 67 பேர் வரை வந்திருந்தனர். """"சரி... அமைச்சருக்கு மேஜையில் சாப்பாடு வைத்தாயிற்று! மிச்சமுள்ள மக்களுக்கு என்ன கதி தெரியலையே...?"" என்று நான் சிந்தித்துக் கொண்டே என் துணைவியாரிடம் சென்று, """"என்ன செய்வது...? இத்தனை பேர் வந்திருக்காங்களே...?"" என்று நான் கேட்க, """"வந்திருக்காங்க இல்லே...? பாய விரிங்க... எல்லாத்துக்கும் சாப்பாடு ஆயத்தமா இருக்கு!"" என்று கூறினார். சுமார் 70 முதல் 80 பேர் சாப்பிடும் அளவுக்கு சுவையான பிரியாணி, துணைக்கு இனிப்பு என எல்லாம் செய்து வைக்கப் பட்டிருந்தது. """"என்னமா... இப்படி பண்ணியிருக்கே...?"" என்று நான் கேட்க, """"வேறென்ன? மந்திரி வந்தா சும்மாவா வருவாங்க...? நீங்க சொல்ற மாதிரி  எட்டுப் பத்துப் பேரெல்லாமா வருவாங்க...? அதனாலதான் முன்னாடியே யோசிச்சி பண்ணி வச்சிட்டேன்..."" என்று சாதாரணமாகக் கூறினார். இப்படிச் சொல்வதற்கு நிறைய சம்பவங்கள் உள்ளன. மொத்தத்தில், இப்படியாக முன்னெச்சரிக்கையுடன் - குறிப்பறிந்து செயல்படக் கூடியவர்.

நற்குணத்திற்குச் சொந்தக்காரர்

பெரிய மனதுக்காரர் அவர். நற்குணத்திற்குச் சொந்தக்காரர். இன்முகத்தாள். எல்லோரையும் தன்ன வர்களாகப் பார்க்கும் நல்ல பண்பு என மொத்த நற்பண்புகளின் உறைவிடமாகவே அவர் திகழ்ந்தார். எனக்குள்ள வருத்த மெல்லாம், இப்படிப்பட்ட நல்ல பெண்மணிக்கு நான் அப்படியொன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லையே... என்பது மட்டும்தான். அவர்கள் என்னுடன் இருந்த காலங்களில் பார்த்துப் பார்த்துச் செய்த ஏராளமான உதவிகளுக்குப் பகரமாக நான் ஏராளமாகச் செய்திருக்க வேண்டும்தானே...? அப்படிச் செய்ய முயற்சித்திருக்கிறேன். ஆனால் திருப்திகரமாகச் செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை.

பிரார்த்தனைகள்

இப்போது அவர்கள் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். உங்கள் அனைவரின் மேலான துஆ பிரார்த்தனைகள் நிச்சய மாக மண்ணறையிலும், மறுமையிலும் அவரது தரத்தை மென்மேலும் உயர்த்தும் என்பதில் எள்ளளவும் எனக்குச் சந்தேகமில்லை. தமிழகம், கேரளம் மட்டுமின்றி - இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் எங்கு பார்த்தாலும் அம்மை யாருக்காக துஆ மஜ்லிஸ்  நடத்தப்பட்டுக் கொண்டி ருக்கிறது. இப்படி இத்தனை பேர் தன் வீட்டுத் தாயார் மறைந்தது போல இத்தனை அக்கறை எடுப்பார்கள்... பிரார்த்தனை செய்வார்கள்... என்றெல்லாம் நான் எதிர்பார்க்க வேயில்லை. எனக்குத் தெரியாமலேயே இவ்வளவும் நடந்திருக்கின்றன. அம்மையாரின் ஜனாஸாவுக்கு வந்த எல்லோரும், """"நாங்க வரும்போது அப்படிப் பண்ணினாங்க... இப்படிப் பண்ணினாங்க..."" எனப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலான நற்பதவி

மொத்தத்தில், அம்மையார் தன் வாழ்நாளில் ஏதாவது குற்றங் குறைகளைச் செய்தி ருந்தால் எல்லாம்வல்ல இறைவன் அவற்றைத் தன் அருளால் மன்னித்து, அவர் களுக்கு மேலான நற்பதவியை வழங்கியருள வேண்டும் என்று நான் துஆ செய்கிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை

இங்கே சிலர் பேசும்போது சொன்னது போல நாம் எல்லாம் ஒரே அமைப்பின்  கீழ் வருகிறோமோ இல்லையோ... அதை விடுங்கள்! ஆனால், இங்கே இப்போது உட்கார்ந்திருக்கிறோமே...? இங்கே பல அமைப்புகள், இயக்கங்கள், மதங்களைச் சேர்ந்தவர் களெல்லாம் இருக்கிறீர்கள். இதுதான் தமிழ்நாடு. எங்கு சென்றாலும் இந்தத் தமிழ்நாடு என்ற அடை யாளத்தைத் தாங்கித்தான் நாம் செல்கிறோம். தமிழகத்தில்  கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் எனப் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் ஒரே  அமைப்பில் இருந்து விடவில்லை. அதுபோல, எல்லோரும் பாஜகவிலும் இல்லை. ஆக, இந்திய மக்கள் என்பது பலதரப் பட்டவர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே இங்கு பிரதானம். அவரவர் மதம், அவரவர் வழி அவரவருக்கு. இப்படித்தான் நாம் இருந்து வந்துகொண்டிருக்கிறோம்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.
ஆனால், இவற்றை யெல்லாம்  தாண்டி இன்று நாட்டில் சில பல சர்ச்சை கள் உள்ளன என்றால் அவையெல்லாம் நீடிக்காது. விரைவில் நீங்கிவிடும். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்ல. அவர்கள் ஒரு சில அம்சங் களைக் கொள்கை யாகக் கொண்டவர்கள் மட்டுமே. அவர்கள் இன்று தவறிழை ப்பார்கள். நாளை உணர்ந்து தெளிந்து திருந்துவார்கள். ஆனால், இந்தத் தவறுக்குள் செல்லாத நாம் நம்மிடையே குழம்பிக் கொள்ளக் கூடாது. நமக்குள் பல அமைப்புகள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இருக்கலாம். அவையெல்லாம் ஒன்று சேர நிறைய காலம் எடுக்கும். ஆனால், நாம் அனைவரும் எல்லாவற்றையும் கடந்து சகோதரர்கள் என்பதை மட்டும் நம் கொள்கையாக வைத்துக்கொள்ள வேண்டும். அண்ணன் - தம்பிகளாக, மாமன் - மச்சான்களாக, அக்காள் - தங்கைகளாக ஒருவரையொருவர் கருதி நடந்துகொள்வதென்பது நம்மிடையே காலங்காலமாக இருந்து வரும் பழக்கவழக்கம்.

இந்திய  யூனியன் முஸ்லிம் லீக்

இதைத்தான் இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையாகவும் கொண்டு ள்ளது. இதையே மற்றவர்களும் தம்  கொள்கையாக்கிக் கொண்டால், இணக்கமாக இருப்பதில் எதுவும் தடையாக அமைந்துவிடப் போவதில்லை. சுருக்கமாக நான் சொல்ல வருவது யாதெனில், முஸ்லிம் சமுதாய இயக் கங்கள் ஓரணியில் வரட்டும் அல்லது வருவதற்குக் காலம் எடுக்கட்டும். ஆனால், இயக்கங்களின் கொள்கை களாக நான் மேற்சொன்ன இந்த உறவுமுறை அமைந்து விட்டால், நமக்குள் பிரிவு களோ, பிணக்குகளோ, கருத்து மோதல்களோ எழ வாய்ப் பில்லை என்பதை மட்டும் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே இயக்கத்தில், ஒரே கொடியின் கீழ் கொள்கை ரீதியாக இணைவது எளிதானதே

ஒரே இயக்கத்தில், ஒரே கொடியின் கீழ் வருவதென்பது அமைப்பு ரீதியாக அத்தனை எளிதானதல்ல. ஆனால், கொள்கை ரீதியாக இணைவ தென்பது மிக எளிதானதே. தேர்தல் எல்லாம் இரண்டாவதுதான். முதலில் நாம் அண்ணன் - தம்பிகள், அக்காள் - தங்கைகள், மாமன் - மச்சான்கள்தான். ஆக, அடையாளங்களால் நாம் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என எதில் இருந்தாலும், அடிப்படைக் கொள்கையால் நாம் இந்த உறவுமுறையில் இணைந்து வாழ்வோம்... அப்படியான இந்த வாழ்வியலை அனைவருக்கும் எடுத்துரைப்போம்... அதற்கு நாம் யாருடைய மனதையும் புண்படுத்தி விடாமல், யாருடைய மத உணர்வு களுக்கும் குந்தகம் விளைவித்து விடாமல், யாரையும் வேறு படுத்தி - விரோதித்துப் பார்த்து விடாமல் - தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், கர்மவீரர் காமராஜர், ம.பொ.சி., ராஜாஜி, கம்யூனிஸ்ட் கட்சியில் டி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், பெரியவர் கல்யாணசுந்தரம்  எனப் பெரும்பெரும் தலைவர் களெல்லாம் தமது இயக்கங்களாலும், சிந்தனைக் களங்களாலும் வேறுபட்டிருந்தாலும், அந்த வேறுபாடுகளை யெல்லாம் மறந்து வாழ்ந்த காரணத்தால் தான் நாட்டில் நாகரிகம் மேலோங்கியது. நல்லிணக்கம் தழைத்தது. இதுதான் ஆண்டாண்டு காலமாக இந்தத் தமிழகத்தில் இருந்து வந்தது. இந்தச் சிந்தனையிலிருந்து விலகுபவர் தமிழகத்துத் தலைவராக இருக்க முடியாது.
இப்படியிருக்க, இன்று அதில் சிலருக்குக் கவனம் சிதறிவிட்டதால், அந்த இணக்கத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும், அதன் தீவினையைப் புரிந்து கொண்டவர்களாகத் திட்ட மிட்டு நாம் செயலாற்றும் போது, அவை யெல்லாம் நல்வினைகளாக மாறும் என்று கூறி, அப்படி மாறுவதற்காக நாம் தொடர்ந்து களப்பணியாற்றிட வேண்டும்... அதற்கு இடைஞ்சலாகத் தமது சொல், செயலை, கற்பனையைக் கூட வெளிப்படுத்துபவர் யாரையும் நாம் அனுமதித்து விடக் கூடாது என்பதையோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் கொள்கையாகவே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் நீங்கள் அனைவரும் உடன்பட வேண்டும் என்பது மட்டுமே எங்களின் வேண்டுகோளாக உள்ளது என்பதைக் கூறிக்கொண்டு. இறைவன் அதற்கு நம் அனைவருக்கும் பேரருள் புரியப் பிரார்த்தித்து, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த உங்களனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி, எனதுரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.