முக்கிய செய்தி

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டிருப்பது விசித்திரமானது
அ.தி.மு.க. அரசின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இது
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்  நீங்கலாக ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தமிழக தேர்தல் வரலாற்றில் விசித்திரமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
 
கடந்த  3 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை காட்டி தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளா
ட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர், சாலை  மற்றும் சாக்கடை, சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
 
உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.
 
விரைவில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிப்பு வெளிவரும்என மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இன்றைக்கு (02-12-2019) திடீரென ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் எனவும், அதுவும் இரு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30-ந்தேதிகளில் நடக்கும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழக வரலாற்றில் உள்ளாட்சி தேர்தலை இதுபோன்று ஊரக பகுதிகளுக்கு மட்டும் தனியாக நடத்துவது இதுவரை நடந்திராத ஒரு விசித்திரமான நிகழ்வு.
 
தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பெண்களுக்கான இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்படவில்லை. வார்டு வரையறையை முறைப்படுத்தாமல் உள்ளது.
 
புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வார்டு வரையறை பணிகளை மேற்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது வேடிக்கையானதும், தமிழக மக்களை ஏமாற்றும் வேலையுமாகும். தேர்தல் பயத்திலிருந்து தமிழக அரசு இன்னும் மீளவில்லை என்பதையே இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் என்றாலே அது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் ஊரக பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் என்றே பொருள்படும்.
 
இன்றைக்கு தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் என்பதற்கு புதியதொரு விளக்கம் தர முனைந்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலே அல்லாமல் வேறில்லை.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
 
தங்கள் அன்புள்ள,
 
 
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்