முக்கிய செய்தி

மத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து பிரதமர் மோடி புரியாமல் தவறாக பேசியிருக்கிறார் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கம்

மத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து பிரதமர் மோடி புரியாமல் தவறாக பேசியிருக்கிறார் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கம்
மத நம்பிக்கைகளில் நீதிமன்றம், யாரும் தலையிட கூடாது; இதுதான் இ.யூ.முஸ்லிம் லீக் கருத்து
பிரதமர் மோடி புரியாமல் தவறாக பேசியிருக்கிறார்
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக்கம்
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளரை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும், தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் - திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அதற்குக் காரணம், தமிழகத்தில் மட்டுமல்ல; இந்திய அளவில் மத்திய பாஜக அரசு நாட்டு மக்களின் குடும்பங்களைச் சீர்குலைத்து, அவர்களின் நிம்மதியை அழித்து வருவதாக, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தைக் கொண்டிருக்கின்றனர். பலரது கோபம் வெளிவந்திருக்கிறது. சிலரது கோபம் வெளிப் படாமல் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் நிறைவாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமது கோபத்தை வெளிப்படுத்திட அவர்கள் ஆயத்தமாக உள்ளனர்.
தமிழகத்திலும் இதே உணர்வு மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. மத்திய பாஜக அரசின் கொள்கை களால் நாட்டு மக்கள் மத ரீதியாகப் பிரிக்கப்பட்டு, அவர்களிடையே இத்தனை ஆண்டு காலம் நிலவி வரும் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்திருப்பதன் மூலம், பாஜகவை விட மிக மோசமான கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகியிருக்கிறது. இதற்காக அந்தக் கட்சியை, நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றிபெறச் செய்து, ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை இந்தத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தி, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழகத்தின் முதலமைச்சராக்கிப் பார்க்கும் முனைப்பில் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளும் இருப்பதைக் காண முடிகிறது.
எப்படி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் திமுக கூட்டணி வென்று, மத்தியில் கூட்டாட்சி அமையப்பெற்று, தமிழகத்திலிருந்து 13 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இம்பெற்று, கலைஞர் கை காட்டிய ஆட்சி அமைந்ததோ, தமிழகத்தில் 300 திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றுள் 286 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவோ அப்படிப்பட்ட  நாட்டுக்கே செழிப்பைத் தரவல்லதொரு  பொற் காலம்தான் இத் தேர்தலில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. 2004இல் இருந்த 13 அமைச்சர்கள் என்ற எண்ணிக்கையையும் தாண்டி, அதிகப்படியான அமைச்சர்களையும் பெற்று, இந்தத் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கும் காலத்தை நாம் அடுத்த சில நாட்களில் அடையவிருக்கிறோம். நாங்கள் பரப்புரைக்காகச் செல்லுமிடங்களிலெல்லாம் அதன் வெளிப்பாட்டை நன்றாகவே கண்டு வருகிறோம்.
கேள்வி: ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அவர்களது வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது? அதற்கு திமுகவினர் ஒத்துழைக் கிறார்களா?
பதில்: ராமநாதபுரத்தில் மட்டுமல்ல; தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் களப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும், கூட்டணியின் அனைத்து இதர கட்சிகளின் வேட்பாளர்களது வெற்றிக் காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றோம். பொதுவாகவே, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்த வகையில், கட்சிகளுக்கிடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருப்பது வழமையான ஒன்றுதான். ஆனால் தேர்தலைப் பொருத்த வரை அதை யெல்லாம் பார்த்துக் கொண்டிராமல், பொது எதிரியை வீழ்த்துவதற்காக, பொதுமக்களின் அனைத்து வாக்குகளையும் ஒரே திசையில் திரட்டியெடுக்கும் பணியை எங்கள் கூட்டணியின் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் எங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு கள் வேறுபாட்டில் வெற்றிபெறுவது உறுதி.
கேள்வி: சபரிமலை விவகாரம் தொடர்பாக, நரேந்திர மோடி  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி களை விமர்சித்துப் பேசியிருக் கிறாரே?
பதில்:  சபரிமலை விவகாரம் என்பது இந்து மதத்திலுள்ள ஒரு சம்பிரதாயம் தொடர்பான விவகாரம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. அதை, கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடமையுணர்ந்து நடைமுறைப்படுத்திவிட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றிடத்தான் ஆளும் அரசும், அதன் காவல்துறையும் நடவடிக்கை களை மேற்கொள்ளும். அப்படி நிறைவேற்ற முயற்சிக்கையில், அதைத் தடுக்கும் வகையில், அந்தக் கோயில் நிர்வாகம், அது தொடர்புடைய மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தினர்.
இதுபோன்ற மத உள் விவகாரங்களில் அந்தந்த மதத் தலைவர்கள்தான் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமேயல்லாது, அரசாங்கமோ  நீதிமன்றமோ அதில் தலையிடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்ற கருத்தை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்கனவே மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.
மத விவகாரங்களில் மாற்றம், திருத்தம் என்ப தெல்லாம் அந்தந்த மதத்தைப் பின்பற்று வோரிடமிருந்துதான் வெளிப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தைப் பொருத்த வரை, அந்தக் கோயிலுக்குள் யார் யார் செல்ல வேண்டும் என அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் சில வரையறைகளை வைத்துள்ளனர். பாலர் பருவத்திலுள்ளவர்கள், ஆண்கள், மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்கள் அங்கு செல்லலாம் என்பது அவர்கள் தமக்குள் வைத்துக் கொண்டுள்ள வரையறை. அது சரியா, தவறா என ஆய்வு செய்வது அந்த மதத்தைச் சாராதவர்களின் வேலையல்ல. அந்தக் கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகம், அக்கோயிலுக்குள் பக்தியுடன் சென்று வந்துகொண்டிருக்கும் பக்தகோடிகள் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தி, அதனடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால் அதில் நியாயம் இருக்கும்.
ஆனால் யாரோ சிலர் பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளதை வைத்து, நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியதால்தான் பிரச்சினை எழுகிறது. ஆக, இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை - மத நம்பிக்கை, மதக் கலாச்சாரங்கள், மதம் தொடர்பான காரியங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வரும்போது, அதை அந்த மதத்தின் தலைமையில் இருப்போர், அந்த மதத்தை நம்பி இயங்கும் பக்தர்கள் ஒருமித்துச்  சொன்னால்தான் அதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமேயல்லாது, அதில் அரசோ, நீதிமன்றமோ, வேறு யாருமோ அவர்களாக முடிவெடுத்து  அந்த மதத்தினரின் மீது தமது முடிவைத் திணிக்கக் கூடாது என்ற கருத்தைத் தெளிவுற சொல்லியிருக்கிறோம். இப்போதும் தெரிவித்து விட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்துப் பேசியபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கருத்தை விளங்காமல் தவறாகப் பேசியிருக்கிறார் என்றே புரிந்துகொள்ள வேண் டும்.
கேள்வி: நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும்தான் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு ஏற்படும் என்றும், இதர அனைத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திர மோடிதான் பிரதமராவார் என அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றனவே?
பதில்: அப்படி ஒரு கருத்துக் கணிப்பு. இன்னொரு கருத்துக் கணிப்பும் வெளியாகியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 149 இடங்களிலும், ஃபெடரல் ஃப்ரண்ட் எனும் கூட்டணிக் கட்சிகள் 162 இடங்களிலும் என மொத்தம் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 311 இடங்களைப் பெறுவர் என்று அவர்களே கூறியிருக்கின்றனர். அப்படி வென்ற பிறகு அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்களா அல்லது தமக்குள் கருத்து வேறுபட்டுக் கொள்வார்களா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்க்க வேண்டியது.
ஆக, 543 தொகுதிகளில் 311 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஃபெடரல் ஃப்ரண்ட் கூட்டணியும் வெல்கிறது என்றால் எஞ்சிய 232 தொகுதிகளில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெல்வார்கள் என்றாகிறது. அப்படியானால், 311 பெரியதா அல்லது 232 தொகுதிகளா? நீங்களே சொல்லுங்கள்.
கருத்து ஒற்றுமை என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பது. அதைப் பற்றி இப்போதே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒன்றை மட்டும் நான் உறுதியாகக் கூறுவேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. ஃபெடரல் ஃப்ரண்ட் கூட்டணியும் அதே கருத்தைக் கொண்டுள்ளது.
நமது இந்திய நாட்டை, காந்தி நேரு  அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் கட்டமைத்த அதன் பாரம் பரியத்திற்கு மாற்றமாக, கோட்சேயும் கோல்வால் கரும் காட்டித் தந்தை பாதையில் பயணிக்கச் செய்திட இந்த பாஜக அரசு வழிநடத்திக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என இப்போது நாட்டில் எல்லோருமே பேசுகின்றனர்.
கடந்த தேர்தலில் வெறும் 32 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், 62 சதவிகித எதிர்வாக்குகளையும் தாண்டி ஆட்சிக்கட்டிலில் பாஜக அமர்ந்தது. அதற்குக் காரணம், எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாதிருந்தது. ஆனால் இப்பொழுதோ, பல மாநிலங்களில் எதிர்க் கட்சியினர் அனைவருமே பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரு மே ஒரே அணியில் ஒன்றிணைவதென்பது தேர்தலுக் குப் பிறகு நடை பெறும்.
தமிழகத்தைப் பொருத்த வரை, இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி, சோனியா காந்தி, வி.பி.சிங் ஆகி யோரெல்லாம் கலைஞர் அவர்களால் அறிவிக்கப் பட்டிருக்கின்றனர். அதே வரலாற்றுப் பின்னணியில் இன்று ராகுல் காந்தி பிரதமராவார் என தளபதி அறிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் சோனியா காந்தி பிரதமர் என்று அறிவிக்கப்பட்டு, அவரும் வென்றார். ஆனால் அவர் தனக்கு வந்த பிரதமர் பதவியை டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்தார்.
அதுபோல, தற்போது ராகுல் காந்தி பிரதமராவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு, குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்படும்போது, அனை வரும் ஒருமித்த குரலில் """"ராகுல் காந்தி ஜிந்தாபாத்"" என்றும் முழங்கலாம். அல்லது, மாயாவதி போன்ற மற்றொருவரைக் கூட பிரதமராக அறிவிக்கலாம். ஆக மொத்தத்தில் மோடி பிரதமராகப் போவதில்லை என்பது தெளிவு.
சுருங்கச் சொல்வ தென்றால், தமிழகத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக கூட்டணி வெல்லப் போவதில்லை. மோடி பிரதமராகப் போவதில்லை என்ற முடிவில் மக்கள் தெளிவாக உள்ளனர். பிறகு யார் பிரதமராவது என்பதை  பாஜகவுக்கு எதிராகக் களம் கண்டு வென்ற அனைவரும் ஒன்றுகூடி, தமக்கிடையில் பேசி முடிவு செய்துகொள்வர். அதுகுறித்து, இப்போதே நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
கேள்வி: இன்று அஞ்சல் வாக்குப் பதிவு நடைபெற்றது. அரசு அலுவலர்களும், காவல் துறையினரும் வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்கி, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வழங்கப் படாதமைக்கு எது காரணமாக இருக்கும்?
பதில்:  அதுகுறித்து எனக்கு முழு விபரம் தெரியவில்லை. நேற்று கூட திருச்சியில் அதுபோன்று அஞ்சல் வாக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துகொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால், மூன்றில் ஒரு பகுதியினருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படவில்லை என அங்கேயே கூறியதையும் நான் கேட்டேன். அதன் முழு விபரம் எனக்குத் தெரியாத நிலையில் அதுகுறித்து நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
தங்கள் அன்புள்ள,
 
 
 
 
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்