முக்கிய செய்தி

திருச்சி பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

திருச்சி பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
இந்தியாவின் 72 ஆண்டுகால கலாச்சாரத்தை சீர்குலைக்க சதி
கஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை மாற்ற நினைப்பது விசித்திரமானது
ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை
பொதுசிவில் சட்டம் கொண்டு வர முயற்சிப்பது மதங்களை கேலிக்கூத்தாக்கும் செயல்
இந்திய மண்ணின் மகத்துவத்துக்கு எதிரானது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை
திருச்சி பிரஸ் கிளப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
 
திருச்சி, ஏப்ரல். 11-
 
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இந்திய மண்ணின் மகத்துவத்துக்கு எதிரானது என இன்று (11-04-2019) திருச்சி பிரஸ் கிளப் பத்திரி கையாளர் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
 
அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இ.யூ. முஸ்லிம் லீக்
உங்கள் பொன்னான நேரத்தையெல்லாம் இந்தச்  செய்தியாளர் சந்திப்பிற்காக ஒதுக்கி வருகை தந்திருக்கும் ஊடகத் தோழர்கள் அனை வருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் துவக்கமாக எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சியில் முதன்முறையாக உங்களைச் சந்திக்கிறேன். இந்த ப்ரஸ் க்ளப் இடவசதி குறைவாகத் தெரிகிறது. வருங்காலத்தில் நல்ல அரசு வரும்போது இதை அனைத்து வசதிகளும் அமையும் வகையில் செய்து தர முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.

 
 இப்போதைய நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. 72 ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியமிக்க -  மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட  பெருந் தலைவர் களால் வழிகாட்டப்பட்ட நம் இந்தியாவை, """"ஒரே மொழி; ஒரே கலாச்சாரம்"" என்ற முழக்கத்தின் கீழ் முற்றிலும் மாற்றியமைக்க இன்றைய பாஜக அரசு தொடர்ந்து முனைந்து வருகிறது. அதில் இதுவரை தோல்வியையும், ஏமாற்றத்தையுமு கண்டுள்ளது.
 
ரஃபேல்
 
ரஃபேல் விமான ஊழல் பிரச்சினையை மூடி மறைக்கப் பார்த்தனர். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் முறையான விசாரணைக்கு உத்தர விட்டிருக்கிறது. இதற்காக முழு முயற்சி மேற்கொண்ட இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என். ராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உத்தரவின் மூலம். ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த ரஃபேல் விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக நிறைய தகவல்களைக் கூறினார். அவை எதுவும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இது தொடர்பாக நியாயக் குரல்கள் கொடுத்த அனைத்துப் பத்திரிக்கைகளும் முடக்கப் பட்டன. இவையனைத்தையும் தாண்டி இப்போது உச்ச நீதிமன்றம் இட்டுள்ள இந்த உத்தரவு, மிகவும் வரவேற்கத்தக்கது.
தி.மு.க.
வரவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம்  தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறவிருக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஊடகங்கள் வாயிலாக கருத்துக் கணிப்பு என்ற பெயரில் - உண்மைகள் மறைக்கப்பட்டு, திட்டமிட்டு பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை யெல்லாம் பொய் யாக்கி, உண்மை வெல்லத்தான் போகிறது. அதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கத்தான் போகின்றனர்.
 
கருத்து திணிப்பு
 
மத்தியிலும், மாநிலத்திலும் பொதுமக்களுக்கு எதிராக அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுங்கோபத்தில் இருக்க, அவற்றையெல்லாம் மூடி மறைக்கும் வகையில் """"கருத்துக் கணிப்பு"" எனும் பெயரில் கருத்துத் திணிப்பு செய்யப்பட்டுக் கொண்டி ருக்கிறது. 
கடந்த 3 ஆண்டுகளில் எந்த இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெறவில்லை. அவர்களை முழுதும் ஆதரிக்கும் பகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வெல்லவில்லை. அவர்களுக்கு ஆதரவான வர்களே இன்று அவர்களுக்கு எதிரானவர் களாக மாறி விட்டனர் என்பதையே இது காட்டுகிறது.
 
நாடாளுமன்ற தேர்தல்
 
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி வெளி யிட்ட தேர்தல் அறிக்கை யையே - சிற்சில மாற்றங்கள், இணைப்பு களுடன் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் வெளி யிட்டிருக்கிறது. கஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் என்ற நிலை மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தன் மூலம், அம்மாநிலத்தில் அமைதியை நிரந்தரமாக இல்லாமலாக்கும் வேலையை பாஜக செய்ய முனைந்துள்ளது. இத்தனை ஆண்டு காலம் யாரும் சொல்லாத, சொல்ல நினைக் காதவற்றை இவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.
 
ராமர் கோவில்
 
ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறியிருக்கின்றனர். ஓர் அரசின் வேலை கோவில் கட்டுவதல்ல. முறையான வழிபாட்டுத் தலங்களைப் பாது காப்பதுதான். ராமர் கோவில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்க, நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் ஓர் ஆளும் கட்சியே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது என்றால் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது இந்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.
 
பொது சிவில் சட்டம்
 
பொது சிவில் சட்ட த்தை இந்தியாவில் நடை முறைப்படுத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து, நீதியரசர் பி.எஸ்.சவ்ஹான் தலைமை யிலான குழு ஆய்ந்தறிந்து, 6 மாதங்களுக்கு முன்புதான் அறிக்கை கொடுத்தது. அதில், இச்சட்டத்தை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறே இல்லை என்று தெளிவுற தெரிவித்திருக்க, அதையெல்லாம் மீறி மீண்டும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரி வித்திருப்பது, மதங்களை கேலி செய்யும் செயல்.
 
முத்தலாக்
 
ஒரே நேரத்தில் கணவன் மனைவியை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை கூடாது என இஸ்லாம் கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் """"அவசரமாக ஒரே நேரத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது"" என அறிவித்திருக்க, மத்திய பாஜக அரசு முத்தலாக் தடைச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருவது, முஸ்லிம் ஆண்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கிச் சிறையில் அடைத்து, பெண்கள் மட்டும் அடங்கிய முஸ்லிம் குடும்பங்களைச் சீரழிக்கும் மிகக் கொடூர சிந்தனையின் வெளிப்பாடே ஆகும்.
 
நிக்காஹ் ஹலாலா
 
நிக்காஹ் ஹலாலா தடை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, திருக்குர்ஆன் வசனத்தையே மாற்றத் துணியும் செயல். இறைவனுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போர். இந்த நாட்டில் - குர்ஆனை, பைபிளை, பகவத் கீதையை மாற்றச் சொல்ல யாருக்கு அதிகாரம் உள்ளது? குர்ஆனை மாற்றப்போவதாகச் சொல்ல நீ யார்? உனக்கு யார் அந்த அதிகாரத்தைத் தந்தது?
 
சமஸ்கிருதம்
 
பள்ளியளவிலேயே தமிழை எடுத்துவிட்டு சமஸ்கிருதத்தைத் திணிக்கும் வகையில் பாஜகவின் இந்தத் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இதை விடக் கேவலம் இந்த நாட்டில் என்ன இருக்க முடியும்?
 
மொத்தத்தில் தலைக் கணமும், ஆணவமும் மிகைத் திருப்ப தாகவே இந்தத் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.
 
நாட்டு நலன்
 
இது முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்க ளுக்கே எதிரான தேர்தல் அறிக்கை. அப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டு, அதனை வைத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று கூறி, இந்திய மண் ணின் மகத்துவத்தைக் கெடுக் கும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட் டிருக்கும் இவர்களை இந்த நாட்டின் ஆட்சிக் கட்டி லிலிருந்து முற்றிலும் விரட்டி யடிக்க வேண்டும். இவர்களது தேர்தல் அறிக்கையை - ஒற்றைக் கலாச்சாரத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் தவறான தேர்தல் அறிக்கை என இந்து நாளேடு நேற்று தலையங்கம் மூலம் கண்டித்திருக்கிறது.
 
இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும் வெளி யிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் இந்த மண்ணுக் கேற்ற, மக்களின் பல்லாண்டு காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனையும் தேர்தல் அறிக்கைகள். இந்திய மண்ணுக்கும், தமிழ் மண்ணு க்கும் தேவையான தேர்தல் அறிக்கை. 
 
நீட் தேர்வு 
 
நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு விலக்கு, ஜி.எஸ்.டி. வரியை மாற்றியமைத்தல், மாநில சுயாட்சிக்கு குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் போன்ற அறிவிப்புகளையெல்லாம் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் அறிக்கை, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்ப ளிக்கிறது. மாநில சுயாட்சிக்கு முதலிடம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை நன்கு உணர்ந்துள்ளதாக இந்தத் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. 
 
வேற்றுமையில் ஒற்றுமை
 
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அருமையான தத்துவத்தின் அடிப்படையில் 72 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இந்தியத் திருநாட்டை, தன் எதேச்சாதிகாரப் போக்கால் மாற்றிச் சீர்குலைத்திட முயலும் பாஜகவின் திட்டம் இந்நாட்டில் - குறிப்பாக தென் மாநிலங்களில் - அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எடுபடப் போவதில்லை. இந்த நாட்டின் தொண்மையையே கெடுக்க முனையும் இந்த பாஜகவை - இத்தனை நாட்கள் அதை ஆதரித்தவர்களே வெறுத்தொதுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
எப்படி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் திமுக கூட்டணி வென்று, மத்தியில் கலைஞர் கை காட்டிய ஆட்சி அமைந்ததோ, 286 திட்டங்கள் தீட்டப்பட்டதோ, பாலங்கள் உட்பட மக்களின் பல்வேறு கனவுகளெல்லாம் செயல்வடிவம் பெற்றனவோ அதுபோல, இந்தத் தேர்தலிலும் நாட்டு மக்கள் விரும்பும் நல்ல முடிவு வரும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனும் முழக்கத்திற்கு இந்தத் தேர்தலுக்குப் பிறகு உரிய மரியாதை கிடை க்கும். கலாச்சாரம் கெட்டுப் போகாத வகையில் - பாரம்பரியமிக்க பழைய இந்தியா தொடரும். தேர்தல் பரப்புரைக்காக நாங்கள் செல்லுமிடங்களிலெல்லாம் அதன் வெளிப்பாட்டைப் பார்க்கிறோம். 
 
கேள்வி: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வைரஸ் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது பற்றி?
பதில்: பாஜக பரப்பிக் கொண்டிருக்கும் வைரஸ்தான் இந்தியாவையே பாதித்துக் கொண்டிருக்கிறது. மத நல்லிணக்கத்தைக் குலைத்து, மக்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் ஒற்றுமையைச் சிதைத்துக் குளிர்காய நினைக்கும் அக்கட்சிதான் இந்த நாட்டின் மிகப்பெரிய வைரஸ்.
 
விஷ காற்று
 
வட நாட்டில் வீசி வரும் பாஜக எனும் விஷக்காற்றை, அதிமுக துணையுடன் தமிழக த்திலும் வீசச் செய்ய முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென்னாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் இந்த விஷ வைரஸை அழிக்கும் மிகப்பெரிய சக்தியாகத் திகழும்
கேள்வி: தமிழகத்தில் சிறுபான்மை யினரின் வாக்குகள் சிதறும் என்று கூறப்படுவது பற்றி?
 
பதில்: இங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தின் எல்லா தரப்பு மக்களும் இப்போது இம் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் மனப்பதிவோடுதான் உள்ள னர்.
 
இறையாண்மை
 
அதுபோல, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக கட்சி, இந்திய அரசியல் சாசனத்தைக் கேவலப்படுத்தி, அதைச் சிதைக்க முனையும் கட்சி. இந்தியாவின் இறை யாண்மையையே மாசுபடுத்த முனையும்கட்சி. எனவே, இந்த பாஜக கூட்டணிக்கு எதிராக நாட்டு மக்களின் வாக்குகள் ஒட்டு மொத்தமாகப் பதிவாகும். இதர கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகள் பாஜகவுக்கே சாதகமாக அமையும் என்பதை - பொதுமக்கள் எல்லோரும் முற்காலங்களை விட தற்போது நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.
 
கேள்வி: தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்திருப்பது குறித்த உங்கள் கருத்தென்ன?
 
பதில்: வேட்டைக்குப் போகின்றவர் வெறிநாயை உடன் அழைத்துச் சென்றதாக குணங்குடியார் பாடியது போலத்தான் இப்போது உள்ளது. பாஜகவை இத்தனைக் காலம் எல்லாக் கட்சியினரும் எதிர்த்தனர். """"மோடியா லேடியா?"" என அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் கூறினார். """"ஒரு தடவை நான் ஆதரித்தேன்... அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்... இனி நான் எந்தக்  காலத்திலும் பாஜகவோடு கூட்டு வைக்கவே மாட்டேன்!"" என உரக்க முழங்கினார் அவர். கலைஞர் அவர்களும் பாஜகவுக்கு இந்த மாநிலத்தில் இடம் கொடுக்கவில்லை.
 
அ.தி.மு.க
 
ஆனால், அதிமுக இன்று - வட நாட்டின் விஷ ஜந்துவிற்கு தமிழ் மண்ணில் கதவைத் திறந்து வைத்துள்ளது. அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நீதிமன்றத்தினர் உள்ளிட்ட அதிகாரிகள், சிந்தனை யாளர்கள், பகுத்தறிவாளர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பியிருப்பதாக நீங்கள்தானே (ஊடகங்கள்) பக்கம் பக்கமாக எழுதினீர்கள். அப்படியிருக்க யார் அவர்களை ஆதரிப்பர்?
 
தமிழகத்தில், நாடாளு மன்றத் தேர்தலோடு இணைத்து நடத்தப்படவுள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்த லிலும் திமுக பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்று, தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து, வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் சுதந்திர தினத்தின்போது, தமிழக சட்டமன்றத்தில் அவர் தேசியக் கொடியேற்றுவார்.
 
கேள்வி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரிலேயே மதத்தைக் கொண்டுள்ளது என்று விமர்சிக்கப்படுகிறதே?
பதில்: இந்திய யூனின் முஸ்லிம் லீக், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாமே அவரவர் தத்துவங்களின் அடிப் படையில் உருவாக்கப் பட்ட கட்சிகள்தான். அதற்காக, அக்கட்சிகளெல்லாம் அவர வர் கருத்துக்காக மட்டும்தான் பாடு படுகின்றனவா? இந்த நாட்டில் வாழும் இதர மக்க ளுக்காக அவர்கள் எதுவுமே செய்ததில்லையா? முஸ்லிம் லீக் என்பது கட்சியின் 100 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர்.
 
என் பெயர் காதர் மொகிதீன். நான் கல்லூரியில் 16 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினேன். என் பெயர் இப்படி இருப்பதால், நான் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்தியதாகப் பொருள் கொள்ள முடியுமா?
 
தேசிய ஒருமைப்பாடு
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொள்கை என்னவென்று பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், கலாச்சாரப் பாதுகாப்பு இவைதான் முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை யார் யார் ஏற்றுக் கொண்டார்களோ அவர்க ளெல்லாம் இக்கட்சியில் இருப்பர்; இருக்கின்றனர். மாநில செயலாளராகவும், மாவட்டங்களின் நிர்வாகி களாகவும், ப்ரைமரி பலவற்றின் நிர்வாகிகளாகவும் கூட முஸ்லிமல்லாத பலர் இடம்பெற்றுள்ளனர்.
 
மொத்தத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதச்சார்பான கட்சியோ, ஒரு மதத்திற்காக மட்டும் பாடுபடும் கட்சியோ அல்ல. மாறாக, எல்லா மக்களிடையேயும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் கட்சியாகவே நாங்கள் இருக்கிறோம். அந்தத் தகுதியில்தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலும் இடம்பெற்றிருக்கிறோம்.
 
அதெல்லாம் இருக்கட்டும். தன் பெயரிலேயே பாரதீய ஜனதா - இந்திய மக்கள் கட்சி என்று வைத்துக் கொண்டு இந்துத்துவாவைக் கொள்கையாகக் கொண்டிருக் கின்றனரே? குர்ஆனை மாற்றச் சொல்கின்றனர். பகவத் கீதையை மாற்ற நாங்கள் யாராவது சொல்லியிருக்கிறோமா? எந்த மதத்திற்கு எதிராகவாவது நாங்கள் பேசியிருக்கிறோமா? செயல்பட்டிருக்கிறோமா? முஸ்லிம் லீக் என்று பெயரை வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும் இயங்கும் நாங்கள் வகுப்புவாதிகளா அல்லது பொதுமக்களைப் பிரதிபலிக்கும் பெயரை வைத்துக் கொண்டு, பசுந்தோல் போர்த்திய புலியாக - இந்த நாட்டிற்குப் பெருங்கேடாக இருக்கும் பாரதீய ஜனதா கட்சி வகுப்புவாதக் கட்சியா?
 
பாகிஸ்தான் கொடி 
 
முஸ்லிம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடி என்றனர். இதை விடக் கேவலம் என்ன இருக்க முடியும்? இந்தியாவிலிருந்து பாகிஸ் தான் பிரிக்கப் பட்டபோது, ஒருவர் கூட இந்தியாவை விட்டும் வெளியேறாத வர்கள் நாங்கள். அப்படிப்பட்ட எங்களைப் பார்த்து இப்படிச் சொல்வதற்குக் கேவலமாக இல்லையா?
கேள்வி: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு?
 
பதில்: உலகுக்கே முன்னு தாரணமாக இந்தியத் தேர்தல் ஆணையம் இருப்பதாகப் பலராலும் பாராட்டப் பட்டிருக்கிறது. ஆனால்,  அதன் அண்மைக்கால நடவடி க்கைகள் அந்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
வருமான வரித்துறை
 
வருமான வரித்துறை அதி காரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்களை சில நாட்களுக்கு முன் சந்தித்தேன். அமைச்சரின் உத்தரவு இல்லாமல் இதுபோன்ற ரெய்டுகளை நடத்த முடியாது என அவர் கூறினார். அப்படியானால், இப்போது யாருடைய அரசு இருக்கிறது? அதில் யார் அமைச்சர்? யாருடைய உத்தரவின் பேரில் இந்த ரெய்டு நடக்கிறது என்பதை வைத்தே இந்த ரெய்டுகளின் நோக்கம் என்ன என்பதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்.
 
தேர்தல் ஆணையம்
 
உயர்வுக்குரிய தேர்தல் ஆணையம், பாரபட்சமாக நடக்கிறது என்ற விமர்சனம் இப்போது வரத் துவங்கியிருக்கிறது. இது, இந்திய ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்தும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக அமைந்துள்ளதாகக் கூறி, இந்தியாவின் ஏராளமான கட்சிகள் இணைந்து கைச்சான்றிட்டு, ஜனாதிபதியிடம் முறையீடு செய்யும் அளவுக்கு அது நம்பிக்கையை இழந்து வருகிறது என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது.
 
திருநாவுக்கரசர், பாரிவேந்தர்
 
இந்தத் தொகுதியில் திருநாவுக்கரசர், பாரிவேந்தர் ஆகியோர் நல்லவர்கள். இந் நாட்டின் இறையாண்மையை மதிப் பவர்கள். அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என பொதுமக்களை நான் வேண்டுகிறேன்.
 
19ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக நான் வயநாடு செல்கிறேன். அங்கு 4 தொகுதி கள். அவற்றில் 50 சதவிகித முஸ் லிம் வாக்காளர்கள் உள்ளனர். 
 
இந்தியாவின் பாரம்பரியத்தையே மாற்ற நினைப்பதால் மட்டுமே இந்த பாஜகவை எதிர்க்கிறோம். மற்றபடி - இஸ்லாமையோ, முஸ்லிம்களையோ அழிக்க உலகில் யாரும் இதுவரை பிறக்கவில்லை.
 
பேட்டியின்போது, திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் முனைவர் நிஜாம், துணைத்தலைவர் அப்துல் முத்தலிஃப், செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், பொ ருளாளர் டி.எம்.ஹுமாயூன், தெற்கு மாவட்ட எஸ்.டீ.யூ. தலைவர் செய்யது ஹக்கீம், அதன் துணைத் தலைவர் அப்துஸ்ஸலாம், தெற்கு மாவட்ட எம்.எஸ்.எஃப். துணைத்தலைவர் பாஸில், அதன் பொருளாளர் அஹ்மர், வடக்கு மாவட்டச் செயலாளர் நிஜாமுத்தீன், திருச்சி மண்டல யூத் லீக்  ஒருங்கிணைப்பாளர் அமீருத்தீன், திருச்சி கிழக்கு தொகுதி துணை அமைப்பாளர் ஷம்சுத்தீன், மாநில எம்.எஸ்.எஃப்.பொதுச்  செயலாளர் அன்ஸர் அலீ, 49ஆவது வார்டு தலைவர் ஆரிஃப், மாவட்ட பிரதிநிதி டைலர் சர்புதீன், திருச்சி மணிச்சுடர் செய்தியாளர் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.