முக்கிய செய்தி

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பாபரி மஸ்ஜித் - ராம ஜென்மபூமி இடம் சம்மந்தமான நீண்டநாள் வழக்கிற்கு இன்று (09.11.2019) உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்து விட்டது.
 
உச்சநீதிமன்ற இந்திய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்றுள்ள ஐந்து நீதிபதிகளும் ஒரே விதமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகத்தில் சட்டப் பிரச்சினைக்கு இறுதி முடிவு அளிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கே வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது இறுதித் தீர்ப்பாக அமைகிறது.
 
பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றிய வாதப் பிரதிவாதம் இன்றையத் தேவை இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், அதனை ஏற்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் உடன்பட்டு ஒத்துழைப்பதும் இன்றையக் காலத்தின் கட்டாயத் தேவை என்றே கருதுகிறோம்.
 
இந்திய மக்கள் அனைவரும் இதயப் பூர்வமாக இணைந்து வாழும் சமூக சுமூகத்தை உருவாக்கப் பாடுபடுவதே எல்லோருடைய தேசியக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
 
             தங்கள் அன்புள்ள,
 
 
                     பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
         தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்