முக்கிய செய்தி

தென்காசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

தென்காசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கிறார்கள் என்பதை தந்தி டிவி கருத்து கணிப்பு வெளிப்படுத்துகிறது

பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதை யார் தடுத்தது? முஸ்லிம்களை மட்டும் தவிர்த்தது ஏன் என்பது தான் எங்கள் கேள்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும்

என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் கொண்டு வருவோம் என்று கூறி மக்களை குழப்புவதை நிறுத்த வேண்டும்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் தகவல் பற்றிய முழு விவரங்களை

பத்திரிகைகளில் விளம்பரங்கள் மூலம் மத்திய  அரசு வெளியிட வேண்டும்

தென்காசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி

தென்காசி, ஜன. 13-
மக்கள் தொகை கணக் கெடுப்பில் கேட்கப்படும் தகவல் பற்றிய முழு விவரங் களை மத்திய அரசு   அனைத்து பத்திரிகைகளிலும் விளம் பரங்கள் மூலம் தெளிவாக வெளியிட வேண்டும் என்று தென் காசியில் செய்தியாளர் கள் சந்திப்பில் இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத லைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் தென்காசி ஆனந்தா கிளாசிக் ஹோட்டலில் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில் செய்தி யாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் இரண்டாக பிரிப்பு - மையப்பகுதியில் மாவட்ட தலைநகர்

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையைக் கருத்திற் கொண்டு கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான தம்பி கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தமிழக அரசு தென்காசி மாவட்டத்தைத் தனியாக அமைத்து அறிவித்திருக்கிறது. இதற்காக இந்த அரசுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தற்போது இந்த மாவட்டத்திற்குத் தலை நகரம் ஒன்று அவசிய மாகிறது. அதை ஏதோ ஒரு மூலையில் அமைத்துவிட்டால் மறு முனையில் இருப்போருக்கு அது சிரமம் அளிக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு, மாவட்டத்தின் மையப் பகுதியிலேயே தலைநகரை அமைத்துத் தர தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டுள்ளது. அவரும் அதை பரிசீலிப்பதாகத் தெரி வித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்
கிராமப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டிருக்கிறது. நேரடித் தேர்தல் முறை இல்லாத காரணத்தால் பல இடங்களில் ஆளும் கட்சிக்குச் சாதகமான முடிவுகள் வந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது. எப்படியோ ஒரு வகையாக கிராம பகுதிகளில் இந்தத் தேர்தலை நடத்தி விட்டார்கள். நகர்ப்புறங்களிலும் - பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு களுக்கும் விரை வாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றத்தை நாடி, அதன் தீர்ப்பு வெளிவந்த பிறகுதான் செய்ய வேண்டும் என்ற நிலையில் அசட்டை யாக இருந்துவிடக் கூடாது. மொத்தத்தில் உள்ளாட்சித் தேர்தலை இத்தனை காலம் தள்ளிப் போட்டதால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயர் - இப்பொழுது எஞ்சி யிருக்கும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்துவதன் மூலம் மாற வாய்ப்பிருக்கிறது.

ராஜீவ் காந்தி

இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்த காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு அடுக்கு முறை வேண்டுமா அல்லது மூன்று அடுக்கு முறை வேண்டுமா என்று அனைத்துக் கட்சிகளும் ஒரே இடத்தில் அமர்த்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, ""கிராம பஞ்சாயத்து, ஒன்றியம், மாவட்டம் என மூன்றடுக்கு முறையில் இருக்க வேண்டும்... அப்படி இருந்தால்தான் மத்திய அரசு தரும் நிதி கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து அமைப்பு களுக்கு நேரடியாகக் கைகளில் கிடைக்கும்"" என்று நாங்க ளெல்லாம் வலியுறுத் தினோம்.
பிரதமரும் அவ்வாறு செய்வதைத்தான் விரும் பினார் என்றாலும், திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளே அதை ஆதரிக்காத நிலையில் நாங்கள் எல்லாம் அதைத்தான் சரி கண்டோம். அது நான் வேலூரில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தருணம். நானும் அதையே வலியுறுத்தினேன். தங்கள் மூலமாகவே நிதி ஒதுக்கப் பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தும், தற்பொழுது கிராம பஞ்சாயத்து வரை நேரடியாகவே மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப் படாமல் இருந்த காரணத்தால் கிராமப்புறங் களுக்குத் தேவையான சாலை, குடிநீர், சுகாதாரம், வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான நிதி சுமார் ஆறாயிரம் ஏழாயிரம் கோடி ரூபாய் வரை வராமல் திரும்பிச் சென்றது. இப்பொழுது அந்த நிலை இல்லை.
இதைக் கருத்திற்கொண்டு உடனடியாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்பு களுக்கும் விரை வாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு வரவேண்டிய நிதியும் திரும்பிச் செல்லும். இதை அரசாங்கத்தின் கவுரவப் பிரச்சனையாகக் கருதாமல், மக்களின் பிரச்சனையாகக் கருதி, விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

9 மாவட்டங்கள்

தற்போது தமிழக அரசால் 9 மாவட்டங்கள் புதிதாகப் பிரித்து உருவாக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் எல்லாம் வார்டு வரையறை குழப்பத்தில் உள்ளது. அந்தக் குழப்பங்கள் அனைத்தையும் ஒரே நாளில் சரி செய்வதற்குத் தேவையான அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட சகல வசதிகளும் அரசிடம் இருக்கின்ற நிலையிலும், வேண்டுமென்றே அப்பணி தாமதப்படுத்தப் பட்டுக் கொண்டி ருக்கிறது. விடுபட்டுப் போன உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைந்து தேர்தலை நடத்துவதற்கு முன்பாக இந்த வார்டு வரையரையில் உள்ள குழப்பங்களையும் விரைவாக சரி செய்திட வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்

மத்திய பாஜக அரசால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அதை எதிர்த்து நாடு முழுக்க பல வடிவங்களில் விரிவாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதை முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று நாங்கள் சொல்லவில்லை... மாறாக, இந்த நாட்டில் உள்ள அனைவரும் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்கின்றன. இன்னும் சொல்லப் போனால், பாஜக உடைய பல்வேறு நடவடிக்கை களில் ஒத்த கருத்தில் இருந்த அரசியல் கட்சிகள் கூட இந்தச் சட்டத்திற்கு எதிராகக் கருத்து க்களை வெளியிட்டுள்ளன.
இந்தியா என்பது மதச் சார்பற்ற ஜனநாயக நாடு. இங்கு ஏழு வகையான சிறுபான்மை யினர் இருக்கின்றபோது, அவர் களுள் ஆறு வகை யானவர் களைச் சேர்த்துக்கொண்டு - ஒரு வகையினரை மட்டும் தவிர்ப் பதற்குக் காரணம் என்ன என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சிறுபான்மை யினரைப் பாதுகாப்பதற் காகத்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று சொன்னால்,persecuted minorities என்று பொதுவாகக் கொண்டு வந்திருக்கலாமே? ஏன் ஆறு பேரைச் சேர்த்து விட்டு ஒருவரை மட்டும் விட வேண்டும் என்பதற்கு இந்த அரசு விடை சொல்லியாக வேண்டும்.

சிறுபான்மையினர்

இந்த நாட்டில் சிறுபான்மையினர் யார் என்ற கேள்வி அண்மையில் எழுப்பப்பட்டது. அப்படி ஒரு கேள்விக்கு அவசியமே இல்லை என்பது போல - 1991ஆம் ஆண்டிலேயே தெளிவாகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள், இந்துக்கள் ஆகியோர் இந்த நாட்டின் சிறு பான்மையினர் ஆவர் என அச்சட்டம் கூறுகிறது. எனவே, ஒரு சட்டத்தைக் கொண்டு வரும்போது, சிறு பான்மையினர் என்று பொதுப் படையாகக் குறிப்பிட்டு விட்டாலே போதும். ஏற்கனவே, சிறுபான்மை யினர் யாரென என்ன சட்டம் இருக்க, அதன்படி வாசகம் அமைப் பதை விட்டுவிட்டு, இன்னும் உள்ளே ஊடுருவிச் சென்று வடிவமைத்திருப்பதால், இந்த நாட்டு மக்கள் பெரும் கொதிப்பில் இருக்கிறார்கள். தேவையற்ற பிரச்சினையை இன்றைய மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியல் சாசன சட்டம் சொல்கிறது. மதச்சார்பற்ற நாடு என்றால் என்ன? இந்த நாட்டில் நிறைவேற்றப்படும் எந்தச் சட்டங்கள் ஆனாலும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அது அனை வருக்கும் பொது வானதாக இருக்கவேண்டும் என்ற ஒன்றுதானே மதச்சார் பின்மையை வெளிப்படுத்தும்? “There can’t be any discriminative legislation in our secular government” என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூற, இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்த தலைவர்கள் அனைவரும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டதன் விளைவுதான் இந்திய அரசியல் சாசன சட்டம் எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. ஆக, அரசியல் சாசனச் சட்டம் இந்த நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் வகையில் தெளிவாக இருக்க, இந்தச் சட்டத்தை மதத்தின் அடிப்படையில் கொண்டு வருவதற்கான நோக்கம் என்ன என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டிய நிலையில் ஆளும் பாஜக அரசு இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்று வரை அதற்குத் தெளிவான விடை தரவில்லை. இந்திய அரசியல் சாசன சட்டம் ஏதோ ஒரே நாளில் முடிவு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டது அல்ல. மாறாக, மூன்று ஆண்டுகள் இரவு பகலாகச் சிந்தித்து, இந்த நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களையும் பெற்று நிறைவேற்றப்பட்டது. அப்போதே, "இந்த நாட்டை ஏன் இந்து நாடு என்று அழைக்க கூடாது?" என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்பட்டு, அதற்கான விளக்கங்கள் முறையாகத் தரப்பட்டு, அதை அன்று அரசியல் சாசன குழுவில் இருந்த இந்துக்கள் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் ஏற்றுக் கொண்ட பிறகே இந்திய அரசியல் சாசன சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகத்தான் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

தினத்தந்தி

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, தமிழகத்தில் 61 சதவீத மக்கள் எதிர்ப்பதாக நேற்று ‘தினத்தந்தி’யில் நான் பார்த்தேன். ஊடகத்தினராகிய நீங்கள்தான் தெரிவித் திருக் கிறீர்கள் இத்தனை எதிர்ப்பு இருக்கிறது என்று! தமிழகத்தில் 61 சதவீதம் முஸ்லிம்களா இருக்கிறார்கள்? வெறும் ஆறு அல்லது ஏழு சதவீத மக்கள்தான் முஸ்லிம்கள். ஆக, முஸ்லிம்களையும் தாண்டி அனைத்துத் தரப்பு மக்களும் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஆளும் பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். """"பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதை ஏன் தடுக்க வேண்டும்?"" என்று கேள்வி எழுப்புகிறார்கள். யார் தடுத்தது? நன்றாகக் கொடுங்கள்! ஆனால், ஏன் அதில் முஸ்லிம்களை மட்டும் தவிர்க்கிறீர்கள் என்று மட்டும் தான் நாங்கள் கேட்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை கணக்கீடு

ஐக்கிய நாடுகள் சபையின் பதிவேட்டிலுள்ள ஒரு கணக்கீட்டின் படி, உலகின் சுமார் 58 நாடுகளில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் இந்தியர்களே. ஆக, பிற நாடுகளில் குடியுரிமை பெற்றவர் களின் எண்ணி க்கையில் மற்ற அனைவரையும் விட இந்தியர்களே அதிகமாக உள்ளனர். மற்ற நாடுகளில் ஜாதியாவது, மதமாவது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்தியாவில் இருந்து சென் றவர்கள் குடியுரிமை கேட்டிருக் கிறார்கள் இது ஒருபுறம் என்றால், மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியுரிமை கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிற நாடுகளிலிருந்து பாதிக்கப் பட்டு வந்தவர்கள், சட்டவிரோதமாக இங்கு வந்து குடியேறியவர்கள் என பலரும் குடியுரிமைக்கு முயற்சி எடுக்கிறார்கள். அவர்களுள் அரசாங்கம் யாருக்கு விரும்புகிறதோ அவர்களுக்குக் குடியுரிமை கொடுக்க எல்லா அதிகாரத்தையும் ஆள்வோர் கைகளில் வைத்துள்ளனர்.

ஸ்பெயின் நாடு

ஆனால் அதற்கென ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, "அதில் முஸ்லிம்களை மட்டும் தவிர்த்திருப்பதன் மூலம் - ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களை ஒழித்தது போல இந்தியாவிலும் இந்தச் சட்டம் மூலம் முஸ்லிம்களை அடியோடு அப்புறப் படுத்து வதற்கு மறைமுகத் திட்டம் தீட்டுகிறார்கள், அதற்கான அடித்தளமாகவே இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது!"" என்று நாங்கள் சொல்லவில்லை. நாடு முழுக்க அனைத்து தரப்பு மக்களையும் பேச வைத்திருக்கிறது இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை - நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்."இந்தச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட "மதச்சார்பற்ற நாடு" என்ற அம்சத்திற்கு எதிரானது... ஒரு சமுதாயத்தை மட்டும் தவிர்த்திருப்பது ஏன்?"" என்று கேட்டிருக்கிறோம். இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் வகையில், நீதிமன்றம் கருத்துச் சொல்ல வேண்டும் என இந்திய முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்றனர்.

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித் பிரச்சினையை எப்படி எல்லாக் கட்சிகளும் தூக்கிப் பிடித்தனவோ அதுபோல இன்று மதச்சார்பின்மை ஏற்றுக்கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைகளில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை அரசியலாக்காத ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான். அதுபோல, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் நாங்கள் அரசியலாக்கவில்லை. ஆனால் எல்லாக் கட்சிகளுமே இன்று அதை அரசியல் பரப்புரையாக்கி விட்டன. இனி நாங்களே நினைத்தாலும் அதை நீர்த்துப் போகச் செய்துவிட முடியாது. நிலை அப்படியாகிவிட்டது. பெரும் பாலான நாளிதழ்களில் தலையங்கம், கட்டுரைகள், செய்திகள் என ஊடகங்களிலும் ஏறக்குறைய நிறையவே எழுதித் தீர்த்துவிட்டீர்கள். எனவே, இதற்கு மாற்றமாகச் சிந்திக்க ஊடகங்களுக்கும் வேறு திசையில்லை.

அஸ்ஸாம் மாநிலம்

இந்தியாவில் அஸ் ஸாம் மாநிலத்தில் மட்டும் தான் குடியுரிமைப் பிரச்சினை எழுந்தது. வெளி நாடுகளிலிருந்து வந்து குடியிருப்போருக்குக் குடியுரிமை அளித்தல் என்பது அங்குதான் பிரச்சினையாக எழுப்பப் பட்டது. இந்தியாவின்  வேறெந்த மாநிலத்திலும் அந்தப் பிரச்சினை எழுப்பப் படவில்லை. தேசிய குடிமக்கள் பதிவு என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் பிரச்சினைக்காக மட்டும் கொண்டு வரப்பட்டது. அப்படிக் கொண்டு வரப்பட்ட கணக் கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் 19 லட்சம் பேர் குடியுரிமையற்றவர்களாகக் கருதப்பட்டு, அவர்கள் detention campஇல் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தற்போது கொண்டுவரப் பட்டுள்ளதால் - முறையான ஆவணங்களை அளித்து, அவர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் அங்கிருக்கும் 19 லட்சம் பேருள் 12 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் இந்துக்கள் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்து குடியுரிமையைப் பெற்றுக் கொள்ளவும், எஞ்சியிருக்கும் சுமார் 6 லட்சம் முஸ்லிம்கள் அத்துமீறிக் குடியேறியவர் களாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்குத் திட்ட மிட்டுள்ளதாகவும் அங்கு வலிமையாகப் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது. இது ஒரு பிரச்சினை. இன்னொரு பிரச்சினை என்னவெனில், "அங்கிருக்கும் 12 லட்சம் பேருக்கும் குடியுரிமை வழங்கி, அவர்களை நீங்கள் எங்கள் தலையில்தான் சுமத்தப் போகிறீர்கள்"" என்று அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம் களல்ல; அனைத்துத் தரப்பு மக்களும் கூறிக் கொண்டிரு க்கிறார்கள். அம்மாநிலத்தின் பல பகுதிகளில் Inner Line Permit என்ற அனுமதியை வாங்கிய பின்பே ஒருவர் அங்கு குடியேற முடியும் என்ற நிலை இருக்கிறது. அவற்றையெல்லாம் தூக்கித் தூற எறியும் வகையில் இந்தச் சட்டம் அமைந்துள்ளதாகவும், அப்படிச் செய்தால் தங்கள் நிலை என்னாவது என்றும் கேள்வியெழுப்பி, அஸ்ஸாம் மக்கள்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டவுடன் துவக்கமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி னார்கள். அம்மாநிலத்தில் பாஜகதான் ஆளுங்கட்சியாக உள்ளது. இருந்தும், "இந்தச் சட்டத்தை நாங்கள் நடை முறைப்படுத்த மாட்டோம்!"" என அங்குள்ள முதல்வரே கூறியிருக்கிறார். ஆக, நீங்கள் கொண்டு வந்துள்ள சட்டத்தை உங்கள் கட்சியின்  முதல்வரே நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இந்த விந்தை யெல்லாம் இன்றுதான் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. சட்டீஸ்கரிலும் அம்மாநில முதல்வர், இச்சட் டத்தைத் தங்கள் மாநிலத்தில் நடை முறைப்படுத்த மாட்டோம் என்று கூறி யிருக்கிறார். ஏதோ, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் அனைத்துக் கட்சி களையும் கூட்டி இப்படி முடிவெடுத்துத் தீர்மானமி யற்றியதற்காக ‘குய்யோ முறையோ’ என்று கத்தினார் களே...? அவர்களின் ஆளுகைக் குட்பட்ட மாநிலங்களில் அவர்களது கட்சியின் முதல் வர்களே இப்படிக் கூறி யிருக் கிறார்களே...? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

இலங்கைத் தமிழர்கள் - பூடான் கிறிஸ்தவர்கள்

முஸ்லிம்கள் தவிர - இலங்கைத்  தமிழர்கள், பூடான் கிறிஸ்துவர்கள் ஏன் இந்தச் சட்டத்தில் சேர்க்கப் படவில்லை என்றும் கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது. பூடான் கிறிஸ்துவர்கள் அந்நாட்டில் திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் இடமில்லை. அவர்கள் வெளியில் வந்துதான் செய்து கொள்ள வேண்டும். நேபாளத் திலிருந்து 85 ஆயிரம் பேர் தலாய்லாமா பிரச்சினையில் நாடு கடத்தப்பட்டு அகதிகளாக இந்தியாவில் உள்ளனரே? அவர்கள் பவுத்த மதத்தினர்தானே? ஏன் அவர்களை விட்டீர்கள்? இவையெல்லாம் மத்தியில் ஆளும் உங்களை நோக்கி எழுப்பப்பட்டுள்ள கேள்விகள். ஆனால், இன்று வரை நீங்கள் விடையளிக்கவில்லை.
இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால், இந்திய முஸ்லிம்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. அதைப் பயன்படுத்தி பலரும் பல விதங் களில் அதை விரிவுபடுத்திக் கொண்டி ருக்கிறார்கள். அடுத்து எங்களுக்கு என்ன நேருமோ என்ற அச்சம் அவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், நேற்று கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டியும், கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் இயற்றியிருக்கின்றன.

தேன்கூட்டைக் கலைத்தது போன்றது சி.ஏ.ஏ.

ஆக,CAA என்பதை கலைஞர் மொழியில் சொல் வதானால், தேன்கூட்டைக் கலைத்தது போலாகிவிட்டது. யாருக்கு என்ன ஆகுமோ என்று யோசிக்க வைத்தி ருக்கிறது. இதற்கு மத்திய அமைச்சர்கள்தான் காரணமாகியிருக்கிறார்கள். அமித்ஷா பற்றி நீங்கள்தான் ஊடகத்தில் எழுதியி ருக்கிறீர்கள். அஸ்ஸாமிற்கு சுமார் 13 முறை சென்ற அவர் ""இந்தியா முழுக்க NRC பதிவைக் கொண்டு வருவோம்"" என்றும்,"இந்த நாட்டில் ஒரு வெளிநாட்டவரைக் கூட குடியமர விட மாட்டோம்!"" என்று கூறினாரா, இல்லையா?
National Population Register – NPR என்று கொண்டு வரப்போவதாகவும் கூறினீர்கள். அதில் துவக்கத்தில் 15 கேள்விகள்தான் கேட்கப்பட்டது. பிறகு, கூடுதலாக ஆறு தகவல்கள் சேர்க்கப்பட்டு 21 தகவல்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இன்னும் பத்து தகவல்களைக் கூடுதலாகச் சேர்த்து, 31 தகவல்களைக் கேட்கப் போவதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளி யிட்டிருக்கிறீர்கள். நாங்கள் ஆட்சியில் இல்லை. எனவே, ஊடகங்கள் வாயிலாக நீங்கள் சொல்வதைத்தானே சாமான்யர்களான நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்? ஆக இதை நாங்களாகச் சொல்லவில்லை. இந்தக் கூடுதல் தகவல்களுள் """"உங்கள் தாய் - தந்தையின் பிறந்த இடம், பிறப்புச் சான்றிதழ் தாருங்கள்"" என்றும் கேட்கப்படுகிறது என்றும் ஊடகங்கள்தான் கூறியிருக்கின்றன.

தொட்டில் குழந்தை

"மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் எப்படித் தங்கள் தாய் - தந்தையரின் பெயரைக் கூறுவார்கள்...? எப்படி அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களைத் தருவார்கள்?"" என்று தம்பி அபூபக்கர் சட்டமன்றத்தில் இப்போது கேட்டிருக்கிறார். நரிக்குறவர்கள் வேண்டு மானால் சொல்லலாம். காரணம், ஊர் ஊராகச் சுற்றித் திரியும் அவர்களுக்கு எங்கு குழந்தை பிறக்கிறதோ அந்த ஊர் பெயரைத்தான் வைப் பார்கள். பிறப்புச் சான்றிதழ் என்பதே இப்போது தான் நடைமுறையில் வந்திருக்கிறது. இனிதான் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்

தமிழகத்தில் ஏப்ரல் 01 முதல் மக்கள்தொகை கணக் கெடுப்புப் பணிகள் துவங்கும் என முதல்வர் கூறியிருக்கிறார். வரவேற்கிறோம். ஆனால், அதற்கு முன்பாக "என்ன தகவல்களைக் கேட்கப் போகிறீர்கள் என்ற எங்கள் குழப்பங்களுக்குத் தெளிவு தாருங்கள்"" என்று கேட்டிருக்கிறோம். சட்ட வல்லுநர்களையும், மூத்த அமைச்சர் களையும் கலந்து பேசிச் சொல்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். வரவேற்கிறோம். அதை காலந் தாழ்த்தாமல் விரை வாகச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு விடுமுறைப் பட்டியல்

தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 2020க்கான மத்திய அரசு விடுமுறை பட்டியலில் முஸ்லிம்களது பக்ரீத், ரம்ஜான், முஹர்ரம் என எதுவும் இல்லை. வைகோ கூட அதைக் கண்டித்துள்ளார். "முஸ்லிம்கள் சந்திரக் கணக்கின் அடிப்படையில் பண்டிகைகளை வைத் திருப்பதால் குறிப்பிட இயலவில்லை" என நொண்டிச் சாக்கு கூறப்பட்டிருக்கிறது. இந்து மதத்திலுள்ள சித்திரை, வைகாசி எல்லாம் என்ன சூரியக் கணக்குகளா? அவையும் சந்திரக் கணக்குதானே? தீபாவளி ஒரே நாளிலா வருகிறது? வெவ்வேறு நாட்களில்தானே? "உங்கள் சர்வாதிகாரத்தைப் பயன் படுத்தி முஸ்லிம்களாகிய எங்களை அந்நியப் படுத்து கிறீர்களே, ஒதுக்குகிறீர்களே...? ஏன்?"" என்று கேட்டால் அதற்கு விடையில்லை. எங்கள் அச்சத்தில் நியாயம் உள்ளதா இல்லையா?

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன், "நான் ஒரு இந்து தேசியவாதி" என்றார். பரவாயில்லை சொல்லி விட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டோம். குஜராத் கலவரம் குறித்துக் கேட்கப் பட்டபோது, "சாலையில் வேகமாகக் கார் போகும்போது நாய்க்குட்டி குறுக்கே வந்தால் என்ன செய்ய முடியும்?"" என்று கேட்டார். ஒரு நாட்டின் பிரதமர், அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப் பிலிருப்பவர் கொஞ்சம் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. வாய் மூடிக்கொண்டாவது இருந்திருக்கலாம். ஆனால் இப்படிப் பேசினார். பாராளுமன்றத்தில் அவர் பேசிய முதல் பேச்சில், "இந்தியாவை ஆயிரமாண்டு கால அடிமைத்தனத்திலிருந்து மீட்க எமது ஆட்சி வந்துள்ளது"" என்றார். எந்த அடிப்படையில் ஆயிர மாண்டு? 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களும், அதற்கு முந்தைய 800 ஆண்டுகள் மொகலாய முஸ்லிம் களும்தானே ஆண்டனர்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 303 பேரை நிறுத்தினீர்கள். ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. உங்கள் கூட்டணியில் 357 எம்.பீக்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. 4 கோடி முஸ்லிம்கள் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு முஸ்லிமைக் கூட நீங்கள் போட்டியிடச் செய்யவில்லை.

முத்தலாக் தடைச் சட்டம்

முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றினீர்கள். நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், ஒரே நேரத்தில் ஒரு கணவன் தன் மனைவியை மூன்று முறை தலாக் சொல்வது செல்லாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருக்கிறது. ஆனால், முத்தலாக் தடைச் சட்டத்தில், அப்படி ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லும் கணவனுக்கு 3 ஆண்டுகள் பிணையில் வெளிவர இயலாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறியதை நாங்கள் எதிர்த்தோம். காரணம், இந்தச் சட்டத்தை வைத்துக்கொண்டே முஸ்லிம் ஆண்களை யெல்லாம் விருப்பம் போல சிறையில் தள்ள இயலும். இதுகுறித்து நாங்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை விடையில்லை.

கஷ்மீர்-370வது சட்டப்பிரிவு

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் - கஷ்மீருக்கான 370ஆவது சட்டப் பிரிவு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டீர்கள். "முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ள கஷ்மீர் இந்தியாவில் இருப்பது முஸ்லிம் களுக்கும், இந்தியாவுக்கும் பெருமை"" என்றார் எங்கள் தலைவர் காயிதேமில்லத். அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கஷ்மீரை இந்தியாவில் சேர்த்தபோது ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துதான் அது.  அத்தகு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகின்றன. இன்னும்  அங்கு அமைதி வரவில்லையே ஏன்? முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அனைத்து அரசியல் தலைவர்களையும் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளீர்களே? வெளி மாநிலங்களிலிருந்து அரசியல் கட்சியினர் கஷ்மீருக்குள் செல்ல முயன்றால் தடுக்கிறீர்கள். ஆனால், உலக அரசியல் கட்சிகளையெல்லாம் அங்கு அழைத்துச் சென்று படம் காட்டுகிறீர்கள்.
கஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 370ஆவது சட்டப் பிரிவை நீக்கிய அரசு - நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், மஹாராஷ்ட்ராவிலுள்ள விதர்பா, ஆந்திராவிலுள்ள ராயலசீமாவுக்கெல்லாம் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 371 ஏ முதல் ஐ வரை எதையும் கைவைக்கவில்லை. அந்தந்தப் பகுதிகளில் கள நிலவரத்திற்கேற்ப சிறப்புச் சட்ட விதிகள் இருக்கின்ற காரணத் தால்தான் அங்கெல்லாம் இருக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. அவற்றையெல்லாம் எடுத்துவிட்டால் அங்கு எப்படி அமைதி நிலவும்?
இப்போது நான் சொல்கிறேன், எழுதிக் கொள் ளுங்கள்! கஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370ஆவது சட்டப் பிரிவை நீக்கிய நீங்கள் ஒன்று அதைத் திரும்பக் கொடுக்க வேண்டும் அல்லது 371ஆவது சட்டப் பிரிவின் அடிப் படையிலாவது சிறப்பு அந்தஸ்தை வழங்கிட வேண்டும். அப்படிச் செய்யாத வரை அங்கு அமைதி திரும் பவே திரும்பாது. அங்குள்ள மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

பொருளாதார வளர்ச்சி

இதையெல்லாம் இந்த அரசு செய்வதற்குக் காரணம், கடந்த முப்பதாண்டுகளில் இருந்த நிலையை விட தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் அதளபாதாளத்தில் உள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம், பெட்ரோல் விலையேற்றம் ஏற்படும். தொழிற் சாலைகளில் உற்பத்தி குறையும். தொழி லாளர்களுக்குத் திண்டாட்டம் ஏற்படும். நாடெங்கும் அவர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள். இவற்றின் காரணமாக, நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாவர். இப்பிரச்சினையிலிருந்து மக்களைத் திசை திருப்பவே இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற நட வடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளன. ஆனால், இப்போது நாடே இதைக் கண்டித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டை பொருளா தாரத்தில் வளர்ச்சியடையச் செய்திட, ஆளும் பாஜக அரசு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். அதற்கு முதலில் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும். "NRC இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு வருவோம்!"" என்று கூறி, மக்களைக் குழப்புவதை நிறுத்த வேண்டும். அஸ்ஸாமுக்கு மட்டுமான அதிலுள்ள குறைகளைச் சரி செய்வோம் என்று மட்டும் கூறுங்கள்.
தேசிய குடியுரிமைப் பதிவேடு என்பது வேறு. அதை நாட்டு மக்கள்தொகை கணக் கெடுப்புடன் இணைக்காதீர்கள். """"மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் என்னென்ன கேட்கப் போகிறீர்கள்? எத்தனை தகவல் வேண்டும்? அவற்றுடன் என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?"" என நாட்டு மக்கள் அனைவரும் குழப்பத்துடன் கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்தைப் போக்கும் வகையில்,"நாங்கள் இன்னின்னவற்றைத்தான் கேட்கப் போகிறோம் என விரைவாக அனைத்து பத்திரிக்கையிலும் அரசு விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
நாங்கள் இங்கே முஸ்லிம்களுக்காக மட்டும் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்காகவுமே பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, முஸ்லிம்களுக்காக மட்டும் நாங்கள் பேசுவதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இப்போது கூறியவற்றை யெல்லாம் பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்காக, இம்மாதம் 18ஆம் நாளன்று கடையநல்லூரில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடத்தவிருக்கிறோம். பெருந்தலைவர்கள் எல்லாம் அதில் கலந்துகொண்டு, நல்ல கருத்துக்களை வழங்க வுள்ளனர். ஊடகத் தினராகிய நீங்களும் என்றும் போல எங்களுக்கு ஒத்துழைத்து, இத்தகவல்களையெல்லாம் பொதுமக்களிடம் விரிவாக எழுதிச் சேர்ப்பியுங்கள் என்று வேண்டிக் கொண்டவனாக, எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்ற கூறி முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில துணைத்தலைவர் எஸ்.எம். கோதர் முகைதீன், மாநில செயலாளர்கள் நெல்லை மஜித், கே.எம். நிஜாம்தீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ, தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.செய்யது சுலைமான், செயலாளர் வி.ஏ.எம். இக்பால், பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், துணை செயலாளர் ஏ.அப்துல் வகாப், நெல்லை மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், பொருளாளர் கானகத்து மீரான், முஸ்லிம் மாணவர்பேரவை தேசிய இணைச் செயலாளர் எம். முகம்மது அல்அமீன், திருச்சி மாவட்ட மணிச்சுடர் செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, தலைமை நிலைய பேச்சாளர் எம். முகம்மது அலி, மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, ராமநாதபுரம் நகர செயலாளர் ஹதியத்துல்லா, கடையநல்லூர் கே.எம். ரஹ்மத்துல்லா, எம்.ஏ.முகம்மது கோயா, தென்காசி எம். முகம்மது முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்.