முக்கிய செய்தி

சென்னை எம்.எஸ்.எஃப். மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

சென்னை எம்.எஸ்.எஃப். மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு
அசாமில் தடுப்பு காவல் மையம் இல்லையென்ற மத்திய அமைச்சரின் தகவல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்
நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத் எதிர்ப்பு போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு
சென்னை எம்.எஸ்.எஃப். மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு

சென்னை, பிப். 08-
அசாமில் தடுப்பு காவல் மையம் இல்லையென்ற மத்திய அமைச்சரின் தகவல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்றும், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத் எதிர்ப்பு போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு என்று சென்னையில் நடைபெற்ற எம்.எஸ்.எஃப். மாநாட்டில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாணவர் பேரவை எம்.எஸ். எப் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் (06-02-2020) வியாழக் கிழமை மாலை 7 மணிக்கு மாநிலத் தலைவர் பழவேற்காடு மு.அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம்  மாணவர் பேரவை - எம்.எஸ்.எஃப். சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு இங்கே சிறப்பாக நடத்தப்பட்டுக் கொண்டி ருக்கிறது. இதில் பெருந் திரளாகக் குழுமி யிருக்கும் உங்கள் யாவரையும் துவக்கமாக வாழ்த்தி வரவேற்கிறேன்.

போராட்ட நிகழ்ச்சிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அணிகளாக மாணவரணி - எம்.எஸ்.எஃப், இளைஞரணி - முஸ்லிம் யூத் லீக், மகளிரணி - மஹிலா லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன் - எஸ்.டீ.யு.,  கே.எம்.சி.சி., ஆகியன இயங்கிக் கொண்டி ருக்கி ன்றன. இவ்வனைத்து சார்பு அணிகளின் சார்பிலும் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தளபதி மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம்

இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஏதோ முஸ்லிம்கள் மட்டும்தான் எதிர்த்துக் கொண்டி ருக்கின்றனர் என்றொரு மாயை சிலரால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அனைத்து சமுதாய மக்களும் இதை எதிர்த்து மிக வலிமையாகக் குரல் கொடுத்துக் கொண்டி ருக்கின்றனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தி - இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிட வேண்டும் என தீர்மானம் வெளியிட்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, இதே கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையெழுத்துகள் பெறப்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்தக் கையெழுத்து இயக்கத்தின் மூலம் கூட்டணிக்  கட்சியினர் பம்பரமாகச் சுழன்று பொதுமக்களின் கையெழுத் துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நமது இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் சார்பில் நாமும் அந்தப் பணியை மிகவும் உத்வேகத்துடன் செய்து கொண்டிருக்கிறோம்.

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு

குடியுரிமைத் திருத்தச் சட்டம் - CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு - NRC, தேசிய மக்கள்தொகை பதிவேடு -NPR  என்றால் என்ன என்பனவற்றை விளக்கி நமது ‘மணிச்சுடர்’ நாளிதழில் தொடராக வெளியிடப்பட்ட கட்டுரை களைத் தொகுத்து இங்கே நாம் நூலாக வெளியிட்டி ருக்கிறோம். இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் இந்தப் பிரசுரத்தை நமது மாநிலம்  முழுவதிலுமுள்ள கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், அனைத்து சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்குப் பகிர்ந்து, அவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வூட்ட வேண்டும் என உங்களை அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

தடுப்பு காவல் மையங்கள் குறித்த தவறான தகவல்-அமைச்சர்

NRC  திட்டத்தின் மூலம் அஸ்ஸாம்  மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தி, அதில் இந்தியக் குடியுரிமைக்குத் தகுதியற்றோரை அடைத்து வைப்பதற்கான detention camp  இந்தியாவில் எந்த இடத்திலும் இல்லை என நேற்று பாராளு மன்றத்தில் அமைச்சர் ஒரு தவறான தகவலைத் தந்தி ருக்கிறார். உங்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு நேரில் வந்து, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள - இந்தியக் குடியுரிமை பறிக்கப்பட்டு detention campஇல் எத்தனை மக்கள் அடைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை, அவர்கள் சந்தித்து வரும் இழப்புகளை யெல்லாம் பட்டியலிட்டு, அந்த அறிக்கையை - இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சராக இருந்த திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடத்தில் அளித்தனர். இப்படி ஒரு முறையல்ல! மூன்று முறை அவர்களால் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து இதுவரை மத்திய அரசு ஒரு சொல் கூட சொன்னதே யில்லை. ஆனால், அப்படியொரு முகாமே இல்லை என முழுப் பூசணிக்காய் சோற்றில் மிகத் தெளிவாக மறைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

இ.யூ. முஸ்லிம் லீகை தொடர்ந்து சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்

சரித்திரப் பதிவுகள் - வரலாற்று உண்மைகள் எல்லாம் அனைவரும் அறியவே திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இந்த நாட்டின் விடுதலைக்குப் பிறகான 72 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத நிகழ்வுக ளெல்லாம் இப்போதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், நம் நாட்டின் உயிர்த்துடிப்பான இந்திய அரசியல் சாசன சட்டத்தை - இந்த நாட்டின் ஜனநாயக மாண்பைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொரு குடி மகனுக்கும் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்ட த்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். நம்மைத் தொடர்ந்து பலரும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

வழிகாட்டியாக திகழும் முஸ்லிம் மாணவர் பேரவை

அந்த வகையில், முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் இங்கும் இன்று இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்காக உங்களை நான் வாழ்த்திப் பாராட்டுகிறேன். முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் அண்மையில் பெங்களூருவில் -“Save India! Save Indian Constitution!! - இந்தியாவைப் பாதுகாப்போம்! இந்திய அரசியல் சாசன சட்டத்தப் பாதுகாப்போம்!!"" என்று ஒரு முழக்கத்தை வெளியிட்டு, அதை நகரம் முழுக்க சுவரொட்டியாக ஒட்டி பொதுமக்களைப்  பார்க்கச் செய்தார்கள். அத்தோடு நிறுத்திக் கொள் ளாமல், நமது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முகவுரையிலுள்ள - இந்திய ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாண்புகளைப்  பாதுகாக்கும் அற்புதமான வாசகத்தை - ஆண்டுதோறும் குடியரசு நாளில் உறுதிமொழியாக இந்நாட்டு மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள்தான் தீர்மானம் வெளி யிட்டார்கள். அதற்குப் பிறகு இந்தியாவின் எதிர்க்கட்சிக ளெல்லாம் காங்கிரஸ் தலைமையில் டெல் லியில் கூடிய எதிர்க்கட்சிக் கூட்டுக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை ஏற்று, """"ஒவ்வொரு குடியரசு நாளிலும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முகவுரையை - ஐப் படித்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்கள். ஆக, இத்தனை பெரிய ஒன்றுக்கு வழிகாட்டியாக இந்த முஸ்லிம் மாணவர் பேரவை - எம்.எஸ்.எஃப். இருந்திருக்கிறது என்பதை நினைக்கையில் உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது.
அப்படிப்பட்ட முஸ்லிம் மாணவர் பேரவை - எம்.எஸ்.எஃப். உடைய தமிழக நிர்வாகிகளாக பழவேற்காடு அன்ஸாரீ உள்ளிட்ட அன்புத் தம்பிகளெல்லாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் களம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையானாலும் அதைக் கையில் எடுத்து, அதற்கான தீர்வை நோக்கி மக்களை வழிகாட்டும் அற்புதமான பணியை இந்த முஸ்லிம் மாணவர் பேரவை - எம்.எஸ்.எஃப். - மாநிலத் தலைமையின் முழு ஒத்துழைப்புடன் செய்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், இன்று இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பெருந்திரளாக வருகை தந்து ஆதரவளித்துக் கொண்டி ருக்கிறீர்கள். அதற்காக உங்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த நற்செயல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

பொதுவாக இந்தக் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, "குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு" என்ற தலைப்பில்தான் போராட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே ""குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு"" என்று ஒரு சிறப்பான தலைப்பை நாம்  வைத்திருக்கிறோம். இந்த நாட்டில் நமக்குள்ள  குடியுரி மையைப் பாதுகாப்பதற்கான மாநாடு இது. இங்கே பேசிய பல்சமயப் பெருமக்கள் கூறியிருப்பது போல - இந்த நாட்டில் வாழும் நாம் - நமது முன்னோர்தான் இந்த நாட்டை உருவாக்கியவர்கள். இந்த நாட்டுக்கு - ஸாரே ஜஹான் ஸே அச்சா... ஹிந்துஸ்தான் ஹமாரா என "ஹிந்துஸ்தான்"" என்று பெயரிட்டவர்களும் நாம்தான். இந்த நாட்டின் விடுதலைக்காக இங்கு வாழும் அனைத்து சமுதாய மக்களை விடவும் விகிதாச்சார அடிப்படையில் மிக அதிகமான தியாகங்களை நாம்தான் செய்திருக்கிறோம். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் 20 கோடி முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கிறோம். இத்தனை பேரையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாடு நன்றாக இருக்கும் என்று யாராவது நினைத்தால் அதை விட அறிவீனமான ஒரு சிந்தனையாக வேறெதுவும் இருக்க முடியாது.

பாரபட்சமான சட்டம்

இந்த இந்தியாவில், மத - இன - மொழி - சாதி அடிப்படையில் பாரபட்சமான எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வர இயலாது என இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அறிஞர்கள், நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள் அந்தச் சாசனத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், அப்படியொரு சட்டம் இன்றைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. அவற்றின் தீர்ப்பு இந்த பிப்ரவரி மாத இறுதியில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம். அப்படி வழங்கப்படும் தீர்ப்பு - இந்த நாட்டில் குடியுரி மைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை, பொதுமக்களின் அச்சம், பீதியைப் போக்கும் நல்லதொரு தீர்ப்பாக அமையும் என்று நாம் பெரிதும்  நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றம்

காரணம், எந்தவொரு சட்டத்தைப் பற்றி விவாதிக்கப் பட்டாலும், அது சர்ச்சையாக்கப் பட்டாலும் - நிறைவாக அது இந்திய உச்ச நீதிமன்றத்தால் எவ்வாறு தீர்ப்பளிக்கப் படுகிறது என்பதில்தான் இருக்கிறது. சில பல நேரங்களில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மனதளவில் நமக்கு ஏற்புடையனவாக இல்லாதிருந்த நிலையிலும், இந்த நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களாக நாம் அவற்றை உள்வாங்கி ஏற்றுக் கொண்டி ருக்கிறோம். அந்த அடிப்படையில் இன்று நம் நாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒட்டுமொத்த அனைத்து சமுதாய மக்களிடையேயும் இவ்வளவு பெரிய எதிர்ப்பு ஏன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த சிந்தனை, இந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நிச்சமாக வரும், அதனடிப்படையில் இந்த நாட்டின் ஜனநாயகத்தை - அரசியல் சாசன சட்டத்தைப் பாதுகாக்கும் நல்ல தீர்ப்பை அது தரும் என்று நாம் பெரிதும் நம்புகிறோம்.

ஷாஹின்பாக் 24 மணி நேரமும் தொடர் போராட்டம்

இந்தியத் தலைநகர் டெல்லி யிலுள்ள ஷாஹின் பாக்கில் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் இடைவெளியின்றி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. புத்த கயாவில் நடந்து கொண் டிருக்கிறது. அஸ்ஸாமின் மிக வலிமையாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லா மாநிலங்களிலும் பரவலாக ஆர்ப்பாட்டங்களும், கண்டனப் பொதுக் கூட்டங் களும் நடத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. உண்ணா விரதம், பேரணி, பிரசுரங்கள் வெளியீடு என நாடு முழுவதும் பல வடிவங்களில் இத்தனை பெரிய எதிர்ப்புணர்வுகள் வெளிப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது ஏன் என்பதை உச்ச நீதிமன்றம்  உணர்ந்து, நல்லதொரு தீர்ப்பைத் தந்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நாம் மட்டுமல்ல! நம்முடன் இணைந்த இந்த நாட்டு மக்கள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்றனர். நல்ல தீர்ப்பைத் தந்து இந்த நாட்டின் இறையாண்மையை - ஜனநாயகத்தை - மதச்சார்பின்மையை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும்.

மத்திய அரசின் ஓரவஞ்சனை

இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது பல வடிவங்களில் - வகைகளில் இந்திய மக்கள் அனைவரையும் பாதிப்பதாக இருக்கிற போதிலும், துவக்கமாக - அஸ்ஸாமில் குடியுரிமையை இழந்துள்ள  19 லட்சம் பேருள் - முஸ்லிம்களாக உள்ள சுமார் 4 முதல் 5 லட்சம் பேரை மட்டும் தவிர்த்துவிட்டு, மற்றவர்களு க்கெல்லாம் குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தான்  இது என நாட்டின் பல்சமய அறிவுஜீவிகளும் சொல்லிக் கொண்டிருக் கின்றனர். அந்த மாநிலத்தின் அரசுப் பதிவின்படி, 1971 மார்ச் 24 வரை அஸ்ஸாமில் இருந்தவர் களுக்குக் குடியுரிமை என முன்பு இருந்தது. தற்போது இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக 2014 டிசம்பர் 31 நாளுக்கு முன்பு யார் அங்கிருந்திருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை என்று சொல்லப் பட்டிருப்பதால், 1971 மார்ச் 24 என்ற நாள் இல்லாமல் ஆகிவிடுகிறது. 2014 டிசம்பர் 31 வரை - பாதிக்கப் பட்டவர் களாக இந்த நாட்டிற்கு வந்த இந்துக்கள், பவுத்தர்கள்,  சீக்கியர்கள், ஜைனர்கள், ஃபார்ஸிகள், கிறிஸ் துவர்கள் எல்லாம் குடியுரிமை பெற்ற வர்கள் ஆகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மட்டும் குடியுரிமை யற்றவர்க ளாகி ன்றனர். இன்றைய மத்திய அரசை ஆள்பவர்களின் ஓரவஞ்சனையைத் தான் இந்தச் சட்டம் வெளிப் படுத்தியிருக்கிறது.
அஸ்ஸாமில் ‘அப்துர் ரஹ்மான்’ என்ற பெயர் ‘அப்துல் ரஹ்மான்’ என்று இருந்ததால் - இதைப் போன்ற பெயர் எழுத்துப் பிழைகளைச் சர்ச்சையாக்கி பலரது குடியுரிமை பறிக்கப் பட்டிருக்கிறது. அங்குள்ள ஹலீமா பீவி என்ற பெண் நம்மிடத்தில் சொன்னார்... """"என்னிடத்தில் என் கணவர் பெயரைக் கேட்டார்கள்... ஹஜ்ஜுக்குச் சென்று வந்தவர்களை ஹாஜி என்று மரியாதையாக அழைப்பதை வழமையாகக் கொண் டுள்ளதன் அடிப்படையில் ‘ஹாஜி அபூபக்கர்’ என்று கூறினேன்... பதிவேட்டில் வெறும் அபூபக்கர் என்றுதான் உள்ளது... ஆனால் நீ ஹாஜி அபூபக்கர் என்கிறாய்... எனவே, அவர் உன் கணவரல்ல! உனக்குக் குடியுரிமை கிடையாது!"" என்று கூறி, என்னையும் இந்தச் சிறையில் தள்ளியிருக்கிறார்கள் என வேதனையுடன் கூறினார்.
இப்படி ஏராளமான மக்களைச் சிறையில் தள்ளியி ருக்கும் இந்த அரசு, இன்று அவர்களுள் முஸ்லிம்களை மட்டும் ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதர அனைவருக்கும் குடியுரி மையை வழங்கி, இந்த நாட்டின் சக மக்களோடு மக்களாக அவர்களை ஆக்குவதற்காகவே இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் பெரும் வேதனையுடன் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது உணர்வுகளை மதிக்காதவர்களாக, """"இதில் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது...?"" என சில வேளைகளில் சிலரால் இந்த நாட்டில் கேலியாகத் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த் துக் கொண்டி ருக்கிறோம்.

குடிசைவாசிகள் - நாடோடிகள்

இன்று அஸ்ஸாமிலுள்ள detention campஇல் இருப்பவர்களுக்கு இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், அதன்படியான NRC, NPR  ஆகியவற்றால் குடியுரிமையற்ற நிலை வந்துவிட்டால், அதுதான் நாளை இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்கும் வரும் என்பதை அனைத்து சமுதாய மக்களும் நன்கு உணர்ந் திருக்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால்,  முஸ்லிம்கள் கூட தமது பிறந்த நாள், தமது பெற்றோரின் பிறந்த நாள் என தேசிய குடிமக்கள் பதிவுக்காகக் கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் ஓரளவுக்கு ஆயத்தமாக வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள மஹல்லா ஜமாஅத்துகளால், பொதுநல அமைப்புகளால் அது பொறுப்புணர்ச்சியுடன் செய்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இதே நாட்டில் வீடற்ற வர்களாக, குடிசைவாசிகளாக, நாடோடி களாக, மழைவாழ் மக்களாக, அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கும் அனைத்து சமயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களும் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமையற்றவர்களாக ஆக்கப்படும் பேராபத்து வரவிருக்கிறது என்பதை யாரும் மறக்கவில்லை. முறையான படிப்பறிவற்ற அவர்களிடம் அவர்களின் தாய் - தந்தையரின் பிறந்த நாள், பிறந்த இடத்தையெல்லாம் கேட்டால் அவர்களால் எப்படித் தர முடியும்? சாதாரணமாக அவர்களின் பிறந்த நாளே அவர்களிடம் இருக்காது என்றிருக்க, அவர்களது பெற்றோரின் விபரங்களை அவர்கள் எப்படி வைத்தி ருப்பார்கள்? ஆக, அவர்களிடம் விபரம் இல்லை என்பதற்காக அவர்கள் குடியுரிமை யற்றவாகளாக ஆக்கப் படுவார்கள் என்பது தான் இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்படப் போகும் நிலை.
ஆக, இந்தக் கொடுமை யான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய ஆட்சியாளர் களுக்கு ஒரு வேண்டுகோளை நாம் முன்வைக்கிறோம். நீங்கள் ஆட்சிக்கு வந்திருக் கிறீர்கள்... இந்த நாட்டின் இறையாண் மையை - அரசியல் சாசன சட்டத்தைப் பாதுகாப்பேன் என்று ஒவ்வொருவரும்  உங்கள் வாயால் கூறியே பொறுப்பு களில் அமர்ந்திரு க்கிறீர்கள். எதை உங்கள் வாயால் மொழிந்தீர்களோ அதை உங்கள் உள்ளத்திலும் இருத்தி, இந்த நாட்டிலுள்ள அனைத்து சமய மக்களுக்கும் பாதுகாப்பான, பாரபட்சமற்ற செயல்களை  மட்டும் செய்யுங்கள். ஓரவஞ்சனையான நடவடிக்கைகளில் தயவுசெய்து இறங்காதீர்கள். அப்படி யாரும் இறங்குவதை அனுமதிக்கவும் செய்யாதீர்கள் என்பதே அந்த வேண்டுகோள்.

அரசியல் சாசன சட்டம்

இந்த நாட்டின் ஒவ்வொரு சட்டத்தையும் இந்தியக் குடிமகன் ஏற்றிருக்க வேண்டும். அப்படித்தான் இத்தனைக் காலமாக இருந்து வரும் இந்திய அரசியல் சாசன சட்டம் இந்த நாட்டிலுள்ள அனைத்து மத, இன, மொழி, ஜாதி, பிராந்திய மக்களாலும் ஏற்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட அரசியல் சாசன சட்டத்தை மாற்றும் முடிவைக் கைவிடுங்கள். நீங்கள் மாற்றியமைக்கும்  சட்டத்தை இந்த நாட்டு மக்கள் ஏற்காத நிலை ஏற்படு வதைத் தவிர்த்திடுங்கள் என்ற கோரிக்கை ஒன்றுதான் இந்த மாநாட்டின் மூலம் வைக்கப் பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து குரல் கொடுப்போம்... களத்தில் நிற்போம்... காரியமாற்றுவோம்... எல்லாம்வல்ல இறைவன் அதற்கு என்றும் துணை நிற்பானாக என்று பிரார்த் தித்து, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, எனதுரையை முடிக்கிறேன், நன்றி.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.