முக்கிய செய்தி

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
இந்திய அரசியல் சாசன சட்டம் அளித்துள்ள உரிமைகள்படி செயல்பட 
முஸ்லிம்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே அமைப்பு இ.யூ. முஸ்லிம் லீக்
சென்னை கே.எம்.சி.சி. கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

சென்னை, அக். 14-
இந்திய அரசியல் சாசன சட்டம் அளித்துள்ள உரிமைகள்படி செயல்பட முஸ்லிம்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான் என்று சென்னையில் நடைபெற்ற கே.எம்.சி.சி. கூட்டத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

விழிப்புணர்வு பொதுக்கூட்டங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பு அமைப்பான கே.எம்.சி.சி. சார்பில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு - அதில், அதன் தேசிய - தமிழ்நாடு மாநில - சென்னை கிளை கே.எம்.சி.சி. அங்கத்தினர் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி யடைகிறேன்.

""""அச்சமில்லா இந்தியா! அனைவருக்குமான இந்தியா!"" எனும் முழக்கத்தின் கீழ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தொடர்ந்து பரப்புரைகள், ஆர்ப் பாட்டங்கள், விழிப்புணர்வுப் பொதுக்கூட்டங்கள் இன்று நாடு முழுக்க நடத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தக் கூட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதில் நிறைய பேச வேண்டும் என எனக்கு வேண்டுகோளும் வைக்கப்பட்டிருக்கிறது. நிறைய பேசுவதற்குத் தேவையில்லாத அளவுக்குத் தகவல்களை அன்றாடம் சந்திரிகா பத்திரிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ கத்திலுள்ள முஸ்லிம் லீகர்கள் மணிச்சுடரைப் படிக்கின்றனரோ இல்லையோ கேரள முஸ்லிம் லீகர்கள் சந்திரிகாவைப் படிக்காமல் இருப்பதேயில்லை.

கலாச்சார சுதந்திரம்

இந்த நாட்டில் யீடிடவைiஉயட கசநநனடிஅ, நஉடிnடிஅiஉயட கசநநனடிஅ, உரடவரசயட கசநநனடிஅ - அதாவது அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம், கலாச்சாரச் சுதந்திரம் ஆகியன குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரச் சுதந்திரங்க ளெல்லாம் - திட்டங்கள் தீட்டப்பட்டு, அவற்றைச் செயல்படுத்துவதன் 
மூலமாகப் பெறப்படுகிறது. ஆனால், கலாச்சாரச் சுதந்திரம் என்பது அப்படியல்ல. அது இந்நாட்டு மக்களின் மனப்பதிவு, ஆழ்மன நம்பிக்கை அடிப்படையிலானது. அது திட்டங்களைத் தீட்டி அவற் றின் மூலம் மக்களால் வழங்க முடியாதது.

பிரதமர் நரேந்திர மோடி

இதை நம்மில் யார் புரிந்து கொண்டிருக்கிறோமோ இல்லையோ, இந்நாட்டின் பிரதமர் மோடி மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் அவர் பதவியில் அமர்ந்தவுடன் செய்தியாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியிலேயே, """"நான் ஓர் இந்து தேசியவாதி!"" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அது சரியோ தவறோ, அன்று அவர் சொன்னதிலிருந்து இம்மியளவும் மாறாமல் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தான், இயல்பிலேயே மத நம்பிக்கையில் ஊறித் திளைத்துள்ள மக்களை மதமற்றவர்களாக மாற்றிட இயலாது என்ற சூட்சு மத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவராக  அந்த நம்பிக்கைக் குப் புத்துயிரூட்டும் செயல்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

காஞ்சிபுரம்-அத்திவரதர் தரிசனம்

அண்மையில் காஞ்சி புரத்தில் அத்திவரதர் தரிசனம் என ஒரு பெரிய ஒன்றுகூடல் இந்து சமுதாய மக்களுக்காக நடத்தப்பட்டது. நீருக்கு அடியில் கிடத்தப்பட்டிருக்கும் அத்திவரதர் சிலையை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே மக்களின் பார்வைக்கு வைக்க, அதைப் பார்ப்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும்... மோட்சம் கிடைக்கும்... அவர்கள் தேவதூதர்களாக மாறுவர் என நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கை சரியா, தவறா என்று தலைப்பிற்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது - இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிக அளவில் வசிக்கும் மக்கள் இந்துக்கள். அவர்கள் மனதில் தெய்வ நம்பிக்கை ஆழமாக உள்ளது. அந்த தெய்வ நம்பிக்கைக்கு சில பல பலன்களைச் சொல்லி உயிரூட்டும் முயற்சியாகத் தான் இந்த அத்திவரதர் தரிசன ஏற்பாடு மத்திய - மாநில அரசுகளால் செய்யப்பட்டு, அதில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், தமிழக முதலமைச்சர் என அனைவரும் கலந்துகொள்ள ஆர்வப்பட்டது, அதற்காக சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டது என அனைத்தும் நடந்தன.

இந்துத்துவா நாடாக மாற்ற மறைமுகச் செயல்திட்டம்

இப்படியெல்லாம் செய்து இந்த நாட்டை இந் துத்துவ நாடாக மாற்ற வேண்டும் என்ற அவர்களின் மறைமுகச் செயல்திட்டத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக நிறைவேற்ற ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு, இந்நாட்டில் பெரும் பான்மையாக வாழும் இந்து சமய மக்களின் வர வேற்பைப் பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நாம், இந்துத்துவவாதிகள் அல்லாத இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இன்ன பிற சமயங்களைச் சேர்ந்தவர்கள், ஜனநாயகவாதிகள், மதச் சார்பற்ற சக்திகள், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இயங்கக்கூடிய சக்திகள் என இவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றுசேர்த்து, இந்த இந்துத்துவவாதிகளைத் தனியாக அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
புனித கஃபத்துல்லாஹ்
புனித கஃபத்துல்லாஹ் கட்டிடத்திற் குள்ளேயே 360 சிலைகளை வைத்து இறைவனுக்கு இணை வைத்துக் கொண்டிருந்த மக்களை யெல்லாம் ஓரிறைக் கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டுச் சாதித்திருக் கிறார்கள்  என்பதை வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆக, நமது இந்தத் திட்டம் சாத்தியம்தான் என்பதற்கான நன்மாராயமாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்துக்களோடு நெருங்கியத் தொடர்பு

தமிழகத்திலும்,  கேரளத் திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களாகிய நாம் இந்துக்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இந்துத்து வவாதிகளின் கருத்துகளுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நல்லிணக்கம் எல்லா சமுதாய மக்களிடமும் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட, தமிழகத்திலும் கேரளத்திலும் இந்த இந்துத்துவ சக்திகளுக்குப் படுதோல்வி கிடைத்திருக்கிறது. இதை வைத்து, இந்த நாட்டில் நடைபெறும் ஆட்சி இந்துத்துவ ஆட்சிதான் என்பதை மக்களும் அடை யாளப்படுத்தித் தெரிந்து வைத் திருக்கிறார்கள்.

ஹஜ் பயணிகள்-மக்கள் தொகை

உலகிலேயே முஸ்லிம்களை அதிகளவில் கொண்டுள்ள நாடு இந்தியாதான் என்பதை ஹஜ் பயணியரின் எண்ணிக்கை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆயிரத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில்தான் ஹஜ் பயணத்திற்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாண்டு இந்தியாவிலிருந்து 2 லட்சம் மக்கள் சென்றிருக்கின்றனர் என்றால், மொத்தம் 20 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் 27 கோடி பேர் வரை இருந்தாலும் கூட, அவர்கள் 27 ஆயிரம் தனித்தனித் தீவுகளில் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்தியாவில் நாம்தான் ஒரே இடத்தில் 20 கோடி பேர் என்று வசிக்கிறோம். இது உலகில் வேறெங்கும் கிடையாது.

முன்னுதாரணமாகத் திகழும் கேரள முஸ்லிம் லீக்

ஆக, இந்த 20 கோடி பேரையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படச் செய்ய வேண்டும். அதற்கு, கேரள முஸ்லிம் லீகை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். அவர்களால்தான் அந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பயணிக்க முடிந்திருக்கிறது. நாமும் அதைச் சாதிக்க வேண்டுமானால், இதர மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல், முஸ்லிம்களாகிய நம்மை உண்மையான முஸ்லிம்களாக மனிதகுலத்திற்கு வெளிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு நமது மறைந்த தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் சொன்ன படி - இந்திய முஸ்லிமாக நமது ஒரு கையில் இந்திய அரசியல் சாசனத்தையும், மறு கையில் திருமறை குர்ஆனையும் ஏந்திச் செயல்பட வேண்டும். இந்தியன் என்பதே இந்த நாட்டில் நமது அடையாளம். இந்தியாவிற்குள் நாம் நம்பிக்கையால் முஸ்லிம்கள். அவ்வளவுதான். ஆக, நமக்கு தமிழ்நாடோ, பாண்டிச்சேரியோ, வே றெந்த மாநிலமோ முன்னு தாரணமல்ல. கேரள முஸ்லிம் லீக்தான் முன்னுதாரணம். அதைப் பின்பற்றி இதர பகுதிகளில் செயல்பட்டாலே போதுமானது. கேரளாவின் இந்தத் தகுதிக்குக் காரணம், அங்கு தரீக்கா ரீதியாகவோ, இதர துறைகள் ரீதியாகவோ பல தளங்கள் முஸ்லிம்களுக்கு இருந்தாலும், அரசியல் ரீதியாக அவர்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே தளத்தில் பயணிப்பதுதான்.

நாட்டில் இருக்கும் அனைவரும் இந்துக்கள் அல்ல-இந்தியர்களே

""""இந்தியாவில் இருக்க வேண்டும்! ஆனால் எந்த மதத்தவராகவும் இருக்கக் கூடாது!"" என ஒரு கூட்டமும், """"இந்தியாவில் இருக்கலாம்! ஆனால் இந்துக்களாகத்தான் இருக்க வேண்டும்!"" என்று இன்னொரு கூட்டமும் இந்த நாட்டில் இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ""இந்த நாட்டில் இருக்கும் அனைவருமே இந்துக்கள்தான்!"" என்று கூறுகிறார். அது அவருடைய கொள்கைக் கருத்து. இந்த நாட்டில் சிலை வணங்கிகள், சிலைகளை உடைப்போர், மதங்களைப் பின்பற்றுவோர், மதங்களை வெறுப்போர் என பல தரப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் அனைவருமே இந்துக்கள் என்று எந்த அளவுகோலில் அவர் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில், இந்த நாட்டில் இருக்கும் அனைவரும் இந்துக்கள் அல்ல இந்தியர்களே!

ஆக, இந்தியர்களாக நாம் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப் படையில் மட்டுமே செயல்பட முடியுமேயல்லாது வேறு சில அமைப்புகள் சொல்வது போலவோ செயல்பட முடியாது. இதைத்தான் காயிதேமில்லத் அவர்கள் காலந்தொட்டு இன்று வரையுள்ள எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆக ஓர் இந்திய முஸ்லிமாக நாம் வாழ வேண்டுமானால், அதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைத்தான் பின்பற்றியாக வேண்டும். இதுதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுப் பொருத்தமான அரசியல் இயக்கம். வேறு எந்தக் கட்சியும் இந்திய முஸ்லிம்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நம் தலைவர்களால் துவக்கித் தரப்பட்டது. அதனால் தான் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கும் கஷ்மீர், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பே கிடையாது. அங்கெல்லாம் இயக்கத்தின் கிளையைத் துவக்கிட பல முறையீடுகள் அன்றும் வந்தன. இன்றும் வந்து கொண்டிருக்கின்றன. நாம் செய்யவில்லை. காரணம், அங்கு முஸ்லிம்கள்தான் அதிகமாக வசிக்கிறார்கள். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போய்த்தான் செய்ய வேண்டும் என பெரிதாக எந்த வேலையும் இல்லை. ஆனால், நாட்டின் இதர பகுதிகளில் செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஏராளமான பொறுப்புகளும், கடமைகளும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தை வளப்படுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகைத் தேர்ந்தெடுக்க வேண்டுமேயல்லாது, வெறுமனே இந்திய யூனியன் முஸ்லிம் லீகை மட்டும் வளர்த்தெடுத்திட சமுதாயத்தைத் தேடிச் செல்லக் கூடாது. சமுதாயத்தை வளப்படுத்துவதற்காக கட்சியையும் வளப்படுத்தினால் அது சரியானது.

இந்திய அரசியல் சாசனம்

நாம் நேபாளிகளோ, பாகிஸ்தானிகளோ, பங்களா தேஷிகளோ அல்ல. எனவே, அவையெல்லாம் நமக்கு வழிகாட்டிட முடியாது. நாம் இந்தியர். நமக்கு வழிகாட்ட இந்திய அரசியல் சாசனம் இருக்கிறது. அதைப் பாதுகாத்துப் பின்பற்றி நடப்பதே ஓர் இந்திய முஸ்லிமுக்குப் போதுமானது. இதைத்தாண்டி எதையும், யாரும் நம்மிடம் காண்பிக்கத் தேவையுமில்லை. அப்படிக் காண்பிக்கப் பட்டாலும் அதை நாம் கண்டுகொள்ள வேண்டியதும் இல்லை. இந்தியாவில், இந்திய அரசியல் சாசன சட்டம் நமக்குத் தந்துள்ள உரிமைகளின் படி, மிகச் சரியாகச் செயல்படக் கூடிய ஒரு முஸ்லிமாக நாம் இருப்பதுவும், அப்படி நமக்கு உரிமைகளைத் தந்துள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தைப் பாதுகாத்திட வேண்டியதுவுமே நமது கடமைகள். அந்தக் கடமைகளைச் சரிவர செய்வதற்கு, இந்திய முஸ்லிம் களுக்குப் பயிற்றுவித்த, பயிற்றுவித்துக் கொண்டிருக்கிற ஒரே அமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான்.

பாரதீய ஜனதா கட்சி

இந்தியாவில் இதுவரை இருந்த / இருந்து வருகிற கட்சிகளிலேயே பாரதீய ஜனதா கட்சி என்பது மிகத் தெளிவானது. மிகத் தெளிவாக எந்தக் கொள்கையைச் சொல்கிறார்களோ அதில் குழப்பமே இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். அதனால்தான், இதுவரை கஷ்மீர் மாநிலம் தொடர்பாக முந்தைய ஆட்சி யாளர்களெல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டிருக்க, இவர்களோ தாம் சொன்னதைப் போலவே கஷ்மீருக்கான சிறப்பு அரசியல் அந்தஸ்தையே நீக்கி விட்டு, மற்ற மாநிலங்களைப் போல இதுவும் ஒரு மாநிலம் என்று கூறிவிட்டார்கள்.

நாகாலாந்து, மணிப்பூர்-தனி அந்தஸ்து

நாகாலாந்து,  மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக் கெல்லாம் கூட தனி அந்தஸ்து இருக்க, கஷ்மீரை மட்டும் ஏன் இவர்கள் தேர்ந்தெடுத்து சிறப்பு அந்தஸ்தை இல்லாமலாக்கினர் என்றால், அங்கு முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ளனர்... அவர்கள் பாகிஸ் தானோடு போய்விடுவார்கள்... தனி நாடாகி விடுவார்கள் என்ற அச்சத்தால் மட்டும்தான். வடகிழக்கு மாநிலங்களி லெல்லாம் முஸ்லிம்கள் எங்கும் பெரும்பான்மையினராக இல்லை என்பதால், அவற்றை இவர்கள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
கேரள முஸ்லிம் லீக்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் முன்னுதாரண மானதும், அதை முழுமையாகப் பின்பற்றி நடப்பதுதான் இந்திய முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானதும், சரி யான தீர்வைப் பெற்றுத் தரக் கூடியதும் ஆகும். இதைத்தான் இந்தியா முழுக்க நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை ஏதோ கேரள முஸ்லிம் லீகர்கள் இங்கிருக்கிறார்கள் என்பதற்காக நான் சொல்ல வில்லை. இந்தியா முழுக்க நான் செல்லுமிடங்களிலெல்லாம் தவறாமல் இதை வலியுறுத்து வதையே எனது முதன்மைப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறேன்.

இதை மிகச் சரிவரச் செய்து, என்று இந்தியா முழுக்கவும் கேரள முன்னுதாரணத்தின் அடிப்படையில் கட்டமைக் கிறோமோ அன்றுதான் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். அந்த வகையில், தென் மாநிலங்களில் ஓரளவுக்கு கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றாலும், வட மாநிலங்களில் அதைச் செய்வதற்குப் பெருமளவில் திணறிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், சோர் வடையாமல் செய்து கொண்டுதான்  இருக்கிறோம். வேகம் குறைவாக இருந்தாலும், செய்யும் வேலை தரமாகவும், உறுதியாகவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் வின் நாட்டத்துடன் விரைவில் அனைத்தும் கைகூடி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
அகில இந்திய கே.எம்.சி.சி.யின் பங்களிப்பு
அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்தத் தலையாயப் பணியை நாடெங்கும் எடுத்துச் செல்வதில் அகில இந்திய கே.எம்.சி.சி. மிகப்பெரிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது. இதை இங்கே உங்களுக்காக நான் சொல்லவில்லை. உண்மை அதுதான். காரணம், வெறுமனே நீங்கள் பேசிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கட்சியை வெறுமனே சொற் களால் வளர்க்காமல், செய்யும் சேவைகளால் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மக்களிடத்திலும் நிறைய ஏற்புகளும், பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதுவே காலப்போக்கில் அரசியல் ஒத்துழைப்பாக மாறும்.

இயற்கைப் பேரிடர்கள்

இயற்கைப்  பேரிடர்களில் பாதிக்கப்பட்டு, இருப் பிடங்களை இழந்தோருக்காக நீங்கள் கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறீர்களே, இது ஒன்று போதாதா உங்கள் சேவையை எடுத்துச் சொல்ல? அந்த வீடுகளை முஸ்லிம்களுக்கு மட்டுமா கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை கிறிஸ்துவர்கள், இந்துக்கள் எல்லாம் வசிக்கின்றனர்? அங்கு குடியேறிய பின் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைச் சீர்தூக்கிப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களாக தங்களை ஆக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ, முஸ்லிம்கள் பற்றிய அவர்கள் இத்தனைக் காலமாகச் சுமந்துகொண்டிருந்த தவறான அபிப்பிராயங்கள் நொடிப் பொழுதில் அழிந்து போகுமா இல்லையா?

ஆக, இந்த வழிமுறையைப் பின்பற்றி இப்போது தமிழகத்திலும் இதுபோன்று வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் அது நாடெங்கும் விரிவு படுத்தப்பட வேண்டும். அதற்கு கே.எம்.சி.சி.யின் பங்களிப்பு மிக அவசியமாகிறது. தமிழகத்தைப் பொருத்த வரை நீங்கள் செய்திருக்கக் கூடிய சேவைகள் கொஞ்சநஞ்சமல்ல. அதன் பட்டியல் நீளும். தேவைப்படும் நேரத்தில் மிகச் சரியாக முன்வந்து, மனமுவந்து தாராளமாக உதவியிருக்கும் உங்கள் செயல் மிகப்பெரிய உதவியாக அமைந்திருக்கிறது. """"காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாளப் பெரிது"" என வள்ளுவர் சொல்வதைப் போல, குறிப்பறிந்து நீங்கள் செய்துள்ள சேவை இந்த உலகை விடப் பெரியது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.

செல்லப்பிள்ளை

தமிழகம், கேரளத்தைப் பொருத்த வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது எல்லோருக்குமே செல்லப் பிள்ளைதான். யாருமே இதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். அதற்கு வாய்ப்பே இங்கு கிடையாது. """"அவர்கள் சேவை செய்வார்கள்..."" என்றுதான் நினைப்பார்களே தவிர, கலாட்டா செய்யக் கூடிய கட்சியாக இதை யாரும் பார்க்க மாட்டார்கள். இந்தப் பார்வை, கே.எம்.சி.சி.யின் துணையுடன் நாடு முழுக்க விரிவாக்கப்பட வேண்டும். காரணம், கே.எம்.சி.சி. இன்று அகில இந்திய அமைப்பு. உங்களுக்கு டெல்லியிலிருந்து வேலை இருந்து கொண்டே இருக்கிறது.

டெல்லியில் பிரத்தி யேகமாக ஓர் அலுவலகத்தை உருவாக்குவதற்கான வேலை களும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. இறைநாட்டத்துடன் நாம் செய்து முடிப்போம். அப்படி யான ஓர் அலுவலகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு என்றில்லாமல், அகில இந்திய கே.எம்.சி.சி.க்குத்தான் அமைக்கப்பட வேண்டும் என எனது தனிப்பட்ட கருத்தாக நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காணரம், கட்சிக்கான அலுவலகமாகிவிட்டால் காலப்போக்கில் அது வேறு விதமாகவெல்லாம் போகலாம். ஆனால் கே.எம்.சி.சி.க்கு என்று வரும்போது அது ஒரு கட்டமைப்பிற்குள், ஒரு குழுவிற்குள் இருக்கும். அதன் நோக்கமோ, செயல் திட்டங்களோ வரையறையை மீறாது. எனது இந்தத் தனிப்பட்ட கருத்தை நமது இதர தலைவர்களும் ஏற்பார் களேயானால் அது நடக்கும்.

தன்னலமற்ற களப்பணிகள்

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு என இந்தியா முழுக்க நீங்கள் இதுநாள் வரை செய்து வந்திருக்கிற சேவைகள் குறிப்பாக, இயற்கைப் பேரிடர்களின்போது நீங்கள் ஆற்றியிருக்கிற தன்னலமற்ற களப்பணிகளுக்காக உங்களை நான் மனதாரப் பாராட்டி மகிழ்கிறேன். இதைச் செய்யும் உங்கள் அனைவருக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நிறைவான வெற்றிகளைத் தந்தருள வேண்டும் என நான் உளமாரப் பிரார்த்திக்கிறேன். எனது நிலையில் என்னால் உங்களுக்காக துஆ மட்டுமே செய்ய இயலும். அதைக் குறையில்லாமல் செய்து கொண்டிருக் கிறேன், இனியும் இன்ஷாஅல்லாஹ் செய்வேன். தமிழக நிர்வாகமும் உங்களுக்காக மனதார துஆ செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் செய்துள்ளவற்றில் வெளியில் தெரிந்தது பத்து சதவிகிதம் என்றால், தெரியாமல் நீங்கள் செய்து கொண்டிருப்பது தொண்ணூறு சதவிகிதமாக இருக்கிறது. அவையனைத் திற்காகவும் அல்லாஹ் உங்களுக்கு ஒன்றுக்குப் பல மடங்காகத் தனதருளைத் தந்தருள வேண்டும்.

ஜனநாயக அமைப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை ஒரு ஜனநாயக அமைப்பு. இந்திய அரசியல் சாசன சட்டத்திற்குட்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்தியச் சிறுபான்மை மக்களுக்கான ஒரு முன்னுதாரணமான அரசியல் அமைப்பு. இது இந்தியாவை இஸ்லாமாக்கு வதற்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அது அல்லாஹ்வின் வேலை. அவன் நாடினால் அது நடக்கும். மாறாக, இந்திய மக்களிடையே முஸ்லிம்களாக இருப்பவர்களின் உரிமைகள், தனித்தன்மைகள், கலாச்சார அடையாளங்களுக்குக் குந்தகம் வராமல் பாதுகாப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சி. இப்படி இக்கட்சியை உருவாக்கி விரிவடையச் செய்தவர்கள் கேரள முஸ்லிம் லீகர்களான நீங்கள்தான்.

முஸ்லிமாக வாழ்ந்து காட்டுதல்

இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமைப் பரப்பித்தான் இங்குள்ள இதரர் முஸ்லிம்களாக வேண்டும் என்பதில்லை. இங்கிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு மிகச் சரியான முஸ்லிமாக வாழ்ந்துகாட்டினால்   மணிக் கணக்கில் பேசத் தேவையே இல்லை. அதுவே மிகப் பெரிய பரப்புரையாக அமைந்துவிடும். அதனால் ஈர்க்கப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து இஸ்லாமைத் தழுவுவார்கள். இந்தச் சூழலை உருவாக்கு வதற்காகத்தான் நாம் உழைத்துக் கொண்டிருக் கிறோம். அதைச் செய்வதற் காகத்தான் நாடளவில் நாம் பா ராட்டத்தக்க ஒற்றுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தலைவர்கள் நமக்கு வழிகாட்டியதும், நம்மிடமிருந்து எதிர்பார்ப் பதும் ஆகும். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை மிகச் சரியாகப் பூர்த்தி செய்து, இந்த நாட்டு மக்களின் தேவைக்கேற்ப மிகச் சரியான காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் உங்கள் அனைவரின் ஈருலக நற்பேற்றுக்காகவும் நான் துஆ செய்து, எனதுரையை முடிக்கிறேன், 

நன்றி.
இவ்வாறு காதர் மொகிதீன் பேசினார்.